திருப்பூரில் போலி ஆதார் அட்டைகளுடன் பிடிபட்ட 8 வங்க தேசத்தவர்களின் பின்னணியில் அந்த ஆதார் அட்டைகளைத் தயாரித்த பிகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ராமசேஷையா வர்மா என்ற அந்த இளைஞர் தலைமறைவாகியுள்ளார். தலை மறைவான அந்த இளைஞரை போலீசார் தேடிவருகின்றனர்.
சமீபத்தில் திருப்பூரில் 8 வங்க தேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முறையான ஆவணங்களின்றியும் போலியான ஆதார் அட்டைகளுடனும் பிடிபட்டனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக திருப்பூர் போலீசார் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், போலி ஆதார் அட்டைகளை தயாரிப்பதன் பின்னணியில் பிகாரைச் சேர்ந்த ராமசேஷையா வர்மா (வயது-26) என்ற இளைஞர் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். இவர் ’நூதனமான முறையில் வங்க தேசத்தவர் 8 பேரின் கைரேகைகளையும் கண் விழிகளையும் ஸ்கேன் செய்து அதை ஆதார் டேட்டா பேசில் ஏற்றியுள்ளார். ஆதார் டேட்டா பேசை ஹாக் செய்து உள்ளே நுழைந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்திற்குப் பின்னர், திருப்பூர் போலீசார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆதார் அட்டை தயாரிக்கும் நிறுவனத்தின் துணை இயக்குனர் அசோக் லெனின் திருப்பூருக்கு வந்துள்ளார். இவருடன் ஆலோசிப்பதன் மூலம் வர்மா எப்படி அரசின் டேட்டா பேசில் ஹாக் செய்து உள்ளே நுழைய முடிந்தது என்பதைக் கண்டுபிடிக்கப் போகிறோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட வங்க தேசத்தினர் 8 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாகி விட்ட வர்மாவை போலீசார் தேடிவருகிறார்கள்.
