இலங்கைச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 38 பேரை மீட்கக் கோரி பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 27ஆம் தேதி கடிதம் எழுதினார்.
மேலும் ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த 15 தமிழக மீனவர்களும் [விடுவிக்கப்பட்டதாக]( https://minnambalam.com/k/1491223869) வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் திங்கள்கிழமை 03.04.2017 அன்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கைச் சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக 38 மீனவர்கள் சர்வதேச எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் 04.04.2017 செவ்வாய்க்கிழமை (இன்று) மதியம் 12 மணியளவில் ஒப்படைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையால் மீனவர் பிரிட்ஜோ கொல்லப்பட்டதற்குப் பின்னர் ராமநாதபுரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த 38 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் அனைவரும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்தனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் மார்ச் 31ஆம் தேதி யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 30 பேரையும், வவுனியா சிறையிலிருந்து 8 பேரையும் இலங்கை அரசு விடுதலை செய்தது. இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 38 மீனவர்களையும் சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய கடலோர காவல் படையினரிடம் இலங்கை அரசு இன்று ஒப்படைக்கிறது.,”
