சென்னை வேலைவாய்ப்பு முகாம்: 2,500 பேருக்கு வேலை!

Published On:

| By Balaji

சென்னையில் நேற்று நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 2,500க்கும் அதிகமானோருக்கு வேலைகள் கிடைத்துள்ளன.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகத்தின் சார்பில் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நேற்று (பிப்ரவரி 17)தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் இந்த முகாமை தொடங்கிவைத்தார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 10,000 பேர் வரை கலந்துகொண்டார்கள். இதில் 6,213 பேர் ஆண்கள். எஞ்சியவர்கள் பெண்கள். இந்த முகாமில் ஒட்டுமொத்தமாக 2,584 பேர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

டெக் மகிந்த்ரா, அசெஞ்சர், ஜொமொட்டோ, கே.எஃப்.சி உள்ளிட்ட 130 நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்றன. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் *டி.என்.என்.* ஊடகத்திடம் பேசுகையில், “சமீப காலமாகவே பெரிய வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. குறைந்தபட்சமாக 20 நிறுவனங்களாவது வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் விதமாகத்தான் முகாம்கள் நடத்தப்படுகின்றன” என்றார்.

நேற்றைய வேலைவாய்ப்பு முகாமில் தையல், ஒப்பனையாளர் படிப்புகள் மற்றும் இயந்திரப் பயிற்சிகள் போன்ற திறன் பயிற்சிகளுக்கும் பலர் விண்ணப்பித்திருந்தனர். மார்ச் 1ஆம் தேதி அடுத்த தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share