பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி மோசடி செய்த வழக்கில் சிக்கி, இந்தியாவை விட்டு தப்பிச் சென்றுள்ள தொழிலதிபர் நீரவ் மோடி தனது ஊழியர்களுக்குச் சம்பளம் தர இயலாது எனவும், வேறு வேலையைத் தேடிச் செல்லுங்கள் எனவும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி நிதி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி இவ்வங்கியில் முறைகேடான பரிவர்த்தனைகள் மூலமாக பண மோசடியில் ஈடுபட்டு அவ்வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது பாஸ்போர்ட், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதோடு, அவர் மீது இரண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நீரவ் மோடி தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதம் குறித்து நீரவ் மோடியின் சட்ட வல்லுநர்கள் அது உண்மை தான் என்றும் அதைப் போலவே அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறைக்கும் கடிதம் எழுதி வருவதாகத் தெரிவித்துள்ளனர். அவர் தனது கடிதத்தில், “நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளும் முடக்கப்பட்டுள்ளதால் உங்களுக்கான ஊதியத்தைத் தர இயலவில்லை. எனவே, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நீங்கள் வேறு வேலை ஏதேனும் தேடிக்கொள்ளுங்கள். எதிர்காலம் நிலையற்றதாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
