உலக சினிமாவில் இந்தியாவின் இடம்!

Published On:

| By Balaji

உலகின் சிறந்த நூறு படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிபிசி நிறுவனம். இதில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே ஒரு படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற சத்யஜித் ரேயின் முதல் படமான பதேர் பாஞ்சாலிதான் அந்தச் சிறப்பைப் பெற்றுள்ளது.

43 நாடுகளைச் சேர்ந்த 209 திரை விமர்சகர்கள் வாக்களித்து இந்த பட்டியலை உருவாக்கியுள்ளனர். அகிரா குரோசவாவின் செவன் சாமுராய் படம் இந்தப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. இது தவிர அவரது ரஷோமான், இகிரு, ரேன் ஆகிய படங்கள் முறையே 4, 72, 79 ஆகிய இடங்களை பிடித்துள்ளன. இந்த நூறு படங்களில் 67 இயக்குநர்களின் 19 மொழிப் படங்கள் அடங்கியுள்ளன. அதிகபட்சமாக 27 பிரெஞ்சு மொழிப் படங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 12 மண்டரின் மொழிப் படங்களும், இத்தாலி, ஜப்பான் மொழியில் தலா 11 படங்களும் உள்ளன.

ADVERTISEMENT

முன்பை விட தற்போது இந்தியாவில் பல்வேறு பிராந்திய மொழிப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டப்பட்டு வருகின்றன. ஆனால் 1955ஆம் ஆண்டு வெளியான பதேர் பாஞ்சாலியைத் தவிர இந்த பட்டியலில் இந்தியப் படங்கள் இடம்பெறாதது இந்தியத் திரையுலகம் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமிருப்பதையே காட்டுகிறது. அப்படம் 15ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

“பட்டியலில் இடம்பெற்றுள்ள இருபத்தைந்து படங்கள் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த படங்கள். ஜப்பான் (11), சீனா (6), தைவான் (4), ஹாங் காங் (3), தென் கொரியா (1). முதலிடம் பெற்ற செவன் சாமுராய் படத்திற்குப் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்த விமர்சகர்கள் வாக்களித்தனர். ஆனால் ஜப்பான் விமர்சகர்களில் ஒருவர்கூட வாக்களிக்கவில்லை. ஆறு ஜப்பான் விமர்சகர்கள் அகிரா குரோசவாவின் எந்தப் படத்திற்கும் வாக்களிக்கவில்லை” என்று பிபிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

நூறு படங்களில் நான்கு மட்டுமே பெண் இயக்குநர்கள் இயக்கத்தில் உருவானது என்பது பிபிசியை வருத்தமடையச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்களித்த விமர்சகர்களில் 45% பெண் விமர்சகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

[நூறு படங்களின் பட்டியல்](http://www.bbc.com/culture/story/20181029-the-100-greatest-foreign-language-films)

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share