முன்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறும் போட்டிகளுக்கு இருக்கும் அதே எதிர்பார்ப்பு தற்போது, ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடும்போதும் ரசிகர்களை தொற்றிக்கொள்கிறது. ஆஸ்திரேலியா அணியுடனான போட்டிகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து இரண்டு அணித் தரப்பினரும் பல்வேறுவிதமான கருத்துகளைத் தெரிவித்தவண்ணம் இருக்கின்றனர். அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் இதற்குமுன்னர் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய டெஸ்ட் தொடரில் அதிரடியாக விளையாடி தொடர்ந்து இரண்டு சதம் அடித்தார். அதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டியிலும் 179 ரன்கள் அடித்து அசத்தினார்.
அவர், கடந்த வாரம் அளித்த பேட்டியில், ‘இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மீது ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரும் கவனம் செலுத்துகிறோம் என்றும், அவரை சமாளிக்க தனியான திட்டங்கள் தீட்டியுள்ளோம்’ என்றும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் இதே தகவலைத் தெரிவிக்க அனைத்து நபர்களின் கவனமும் அஸ்வின் பக்கம் திரும்பியது.
இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் மற்றும் ரெண்ஷேவ் முதலில் இருந்தே இந்திய பந்து வீச்சாளர்களின் தாக்கத்தை தாங்கமுடியாமல் தடுமாறினார். 2ஆவது ஓவரிலிருந்து அஸ்வின் தனது பந்து வீச்சை தொடங்கினார். காலை உணவு இடைவேளை வருவதற்குள் ஆஸ்திரேலிய அணி வார்னர் விக்கெட்டை இழந்தது. அதுமட்டுமின்றி, மற்றொரு தொடக்க வீரர் ரான்ஷேவ் ரிடையர் ஹர்ட் முறையில் வெளியேறினார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்மித் மற்றும் மார்ஸ் இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர்.
ஆனால் அஸ்வின் சுழலில் ஸ்மித் 27 ரன்களுடனும், ஜெயந்த் யாதவ் பந்தில் மார்ஸ் 16 ரன்களுடனும் கேப்டன் விராட் கோலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ரிடையர் ஹர்ட் முறையில் வெளியேறிய ரான்ஷேவ், மீண்டும் களமிறங்கி தனது அரை சதத்தை பூர்த்திசெய்தார். அவருடன் ஸ்டார்க்கும் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். இன்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களைச் சேர்த்துள்ளது. ஸ்டார்க் 57 ரன்களுடனும், ஹசல்வூட் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும், ஜெயந்த் யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். சிறப்பாகப் பந்து வீசிய அஸ்வின் 34 ஓவர்களுக்கு 59 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். அதில் 10 மெய்டன் ஓவர்கள் ஆகும்.