விளம்பர தூதரை வெளிய போகச் சொல்லுங்க… ஆர்.என்.ரவிக்கு எதிராக அடுத்த லீகல் வார்

Published On:

| By christopher

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 10) ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. தமிழ்நாடு ஆளுநராக செயல்பட அவருக்கு விருப்பம் இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன. விளம்பரம் தேடும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறார். எனவே தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, திமுக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

கடந்த 6ஆம் தேதி தொடங்கிய இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் கூட முதலில் தேசியகீதம் பாடப்படவில்லை என்று கூறி உரை வாசிக்காமல் வெளியேறினார்.

தேசிய கீதம் விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்து வரும் நிலையில், இந்தாண்டும் அதையே செய்த ஆளுநரின் செயல்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுபோன்று பல விவகாரங்களில் கடந்த 3 மூன்றாண்டுகளாக தமிழக அரசுக்கும், மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.

மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவியின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

எனினும் புதிய ஆளுநர் நியமிக்கப்படாத நிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆளுநராக அவர் நீடித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சென்னையில் கடல் பாலம் : அமைச்சர் வேலு சொன்ன தகவல்!

காற்றில் கலந்த இசை: ’ஏழைகளின் ஜேசுதாஸ்’ ஜெயச்சந்திரன் மறைவால் கலங்கும் பிரபலங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share