கோவையில் பரபரப்பு: கேஎஃப்சி பர்கரில் நெளிந்த புழுக்கள் – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு!

Published On:

| By Pandeeswari Gurusamy

KFC

கோவையில் உள்ள பிரபல கேஎஃப்சி (KFC) உணவகத்தில் வாங்கிய பர்கரில் புழுக்கள் இருந்ததாக இளைஞர்கள் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமா பரவியது.. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை அவிநாசி சாலை நவ இந்தியா பகுதியில் பிரபல சர்வதேச உணவு நிறுவனமான கேஎஃப்சி-யின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று சில இளைஞர்கள் பர்கர் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது, அவர்கள் வாங்கிய பர்கருக்குள் புழுக்கள் நெளிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து அங்கிருந்த உணவக ஊழியர்களிடம் இளைஞர்கள் உடனடியாகப் புகார் தெரிவித்துள்ளனர். அதற்கு மாற்றாக ஊழியர்கள் வேறொரு பர்கரை வழங்கியதாகக் கூறப்படுகிறது. எனினும், புகழ்பெற்ற சர்வதேச உணவகத்திலேயே இவ்வளவு சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டு அதிருப்தியடைந்த இளைஞர்கள், அதனைத் தங்களது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.

“இதுபோன்ற சுகாதாரமற்ற உணவுப் பொருட்களைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதால் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட உணவகம் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று (ஜூன் 8) நவ இந்தியா பகுதியில் உள்ள அந்த கேஎஃப்சி உணவகத்திற்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் குழுவினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உணவகத்தின் சமையல் அறை, உணவு தயாரிப்பு பகுதி மற்றும் வாடிக்கையாளர்கள் அமரும் பகுதி என அனைத்து இடங்களிலும் தீவிர ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது, அங்கிருந்த சில உணவு மாதிரிகள் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு, ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ஆய்வகப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே, அடுத்தகட்டமாக உணவகத்தின் மீது எடுக்கப்பட வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share