அழிவின் விளிம்பில் உலகம்… காலநிலை அறிக்கைகளின்  எச்சரிக்கை!

Published On:

| By Kavi

முனைவர். ச.குப்பன்

நாம் வாழ்கின்ற நம்முடைய புவிக்கோளின் சமீபத்திய காலநிலை அறிக்கைகளானவை, முன்னெப்போதும் இல்லாத வகையில் வெப்பமயமாதல், அதிகரித்து வருகின்ற தீவிர வானிலை மாற்றங்கள், கடுமையான நடவடிக்கைக்கான அவசரத் தேவை ஆகியவற்றுடன் போராடி வருவதை பற்றிய தற்போதைய தெளிவான அபாயகரமான படத்தை வழங்குகின்றன. 

மனித நடவடிக்கைகளே சந்தேகத்திற்கு இடமின்றி இந்த மாற்றங்களை இயக்குகின்றன எனும் ஒருமித்த கருத்து முன்னணி அறிவியல் அமைப்புகளிடையே தெளிவாக உள்ளது, மேலும் மிகவும் பேரழிவு தரும் தாக்கங்களை கட்டுப்படுத்துவதற்கான வழிகூட விரைவாக மூடப்பட்டு வருகிறது என்றும் எச்சரிக்கை செய்கின்றது.

ADVERTISEMENT

முந்தைய பதிவை முறியடிக்கும் வெப்பநிலைகள், துரிதப்படுத்தும் வெப்பமயமாதல்: 

ADVERTISEMENT

மிகவும் வருத்தப்படுவதற்குரிய செய்திகளில் ஒன்று உலக வெப்பநிலையில் இடைவிடாத உயர்வு. 1850 ஆம் ஆண்டில் புவிவெப்பமயமாதல் குறித்த கண்காணிப்புகள் தொடங்கியதிலிருந்து இதுவரையிலான பதிவுகளிலேயே 2024ஆம் ஆண்டானது மிகவும் வெப்பமான ஆண்டாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இது முந்தைய 2023 ஆண்டு பதிவை முறியடித்துள்ளது.

அதைவிட வரலாற்றுப் பதிவில் முதன்மையான பத்து வெப்பமான ஆண்டுகள் அனைத்தும் கடந்த பத்தாண்டுகளில் அதாவது 2015ஆம் ஆண்டுமுதல் 2024ஆம் ஆண்டுவரை வெப்பமானது தொடர்ந்து உயர்ந்துவருகின்ற ஒரு போக்கைத் தொடர்கிறது. இவ்வெப்பமயமாதலின் விகிதமானது வியத்தகு முறையில் அதிகரித்து வருகின்றது, அதாவது 1850 முதல் 1982 வரை நீண்ட கால சராசரியை விட மூன்று மடங்கு வேகமாக அதிகரித்துள்ளது. தொழில் புரட்சிக்கு முந்தைய நூற்றாண்டை விட (1850-1900) நாம் வாழ்கின்ற இந்த புவியானது தற்போது தோராயமாக 1.34∘C முதல் 1.41∘C வரை வெப்பஉயர்வு பெற்றுள்ளது.

ADVERTISEMENT

முக்கிய நிலைகளில் முக்கிய குறிகாட்டிகள்: புவியின் மேற்பரப்பு வெப்பநிலைக்கு அப்பால், பிற முக்கிய காலநிலை குறிகாட்டிகளும் ஆபத்தான உச்சகட்டத்தை எட்டிவருகின்றன: 

பெருங்கடல் வெப்ப உள்ளடக்கம்: கடலின் மேல்மட்ட பகுதியின் வெப்ப உள்ளடக்கம் அதன் மிக உயர்ந்த அளவாக பதிவு செய்யப் பட்டுள்ளது, இது வெப்ப விரிவாக்கத்திற்கும் கடல் மட்ட உயர்விற்கும் பங்களிக்கிறது.

கடல் மட்ட உயர்வு: உலகளாவிய கடல் மட்டங்கள் தொடர்ந்து துரித விகிதத்தில் உயர்ந்து வருகின்றன, இந்த வெப்ப விரிவாக்கம் ஆனது, பனிப்பாறைகள் உருகுதல், பனிப்படலங்கள் உருகுதல் ஆகிய இரண்டையும் விரைவாக செயல்படுத்திடுகிறது. 2015 முதல் , 2024 வரையிலான ஆண்டுகளுக்கு இடையில் உலகளவில் பனிப்பாறைகள் ஆனவை ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக ஒரு மீட்டர் அளவிற்கு உருகுவதால் மெலிந்து வருகின்றன, மேலும் கிரீன்லாந்து, அண்டார்டிகா ஆகிய பகுதிகள் கடந்த பத்தாண்டுகளில் முந்தையதை விட கணிசமாக அதிக அளவிலான பனிப்பாறைகள் உருகி அதன் உயரத்தை இழந்து வருகின்றன.

பசுமை இல்ல வாயுக்களின் செறிவுகள்: வளிமண்டலத்தில் பசுமைஇல்ல வாயுக்களின் செறிவுகள், குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு, 2023ஆம் ஆண்டில் புதிய சாதனைகளை எட்டியது, இது வரவிருக்கும் ஆண்டுகளில் நம்முடைய புவிக்கோளின் வெப்பநிலை உயர்வுக்கு மிக முக்கிய காரணியாக அமைந்திருக்கின்றது. மீத்தேன் அளவுகளும் அதிகரித்துள்ளன, இவையனைத்தும் முதன்மையாக மனித நடவடிக்கைகளால் மட்டுமே உருவாகின்றன.

அதிகரிக்கும் தாக்கங்கள் பரவலான துன்பங்கள்: இந்த வெப்பமயமாதலின் தாக்கங்கள் ஏற்கனவே பரவலாகவும் கடுமையாகவும் உள்ளன, இது உலகின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கிறது:

தீவிர வானிலை நிகழ்வுகள்: மனிதர்களின் செயல்களால் தூண்டப்படுகின்ற காலநிலை மாற்றத்தை வெப்ப அலைகள், அதிக மழைப்பொழிவுகள், அதிகவறட்சி, வெப்பமண்டல சூறாவளிக் காற்றுகள், காட்டுத்தீ ஆகியவை மிக அதிக தீவிரத்துடன் உயர்ந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, வெப்ப அலைகளின் அதிர்வெண், கணிசமாக அதிகரித்துள்ளது, தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் “10 ஆண்டுகளில் 1 வெப்ப அலை(1 in 10 years heatwave )” என்ற அளவு தற்போது 4.1 மடங்கு அதிகமாக 1.5∘C வெப்பமயமாதலுடன் நிகழ்ந்துவருகிறது.

தண்ணீர் பற்றாக்குறை: உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதி பேர் தற்போது வருடத்திற்கு குறைந்தது ஒரு மாதமாவது தம்முடைய அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.

உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றமானது உலகின் பல்வேறு பகுதிகளில் வேளான் உற்பத்தித்திறனின் முன்னேற்றத்தை தடுத்து வருகின்றது.

இடப்பெயர்ச்சி: கடுமையான வெள்ளம், புயல்கள் ஆகிய காரணிகள் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பொதுமக்களை தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தி துரத்துகின்றன.

சுகாதார பாதிப்புகள்: காலநிலை மாற்றமானது மனித உடல் நலனிற்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும், இது காற்றின் மாசுபாட்டை அதிகரிக்கிறது, தொற்று நோய்களைப் பரப்புகிறது. தீவிரமான வெப்ப உயர்வானது, உணவுப் பாதுகாப்பின்மையையும் மனநலப் பிரச்சினைகளாலும் ஏற்படுகின்ற அபாயங்களை அதிகரிக்கிறது. தற்போது ஏறத்தாழ 3.6 பில்லியன் அளவு பொதுமக்கள்  காலநிலை மாற்றத்திற்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வாழ்ந்துவருகின்றனர்.

ஆபத்தான 1.5°Cஅளவு எனும் வெப்பநிலை உயர்வின் வரம்பு: பாரிஸ் ஒப்பந்தத்தால் முடிவுசெய்யப்பட்ட 1.5°C எனும் புவி வெப்பமடைதல் வரம்பின் முக்கியத்துவமே அறிக்கைகள் முழுவதும் மீண்டும் மீண்டும் வருகின்ற கருப்பொருளாகும். 2024ஆம் ஆண்டில் தற்காலிகமாக இந்த வரம்பைத் தாண்டியிருந்தாலும், வரம்பு மீறப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க கடந்த 20 ஆண்டுகளின் சராசரி புள்ளிவிவரங்கள் தேவை என்று அறிவியாலாளர்கள் வலியுறுத்துகின்றனர். இருப்பினும், தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், 2028ஆம் ஆண்டிலேயே 1.5∘C எனும் வரம்பின் அளவைத் தாண்டுவது அறிவியல் பூர்வமாக தவிர்க்க முடியாததாகிவிடும் என்று கணிப்புகள் குறிப்பிடுகின்றன.

நடவடிக்கை, கொள்கை இடைவெளிகளுக்கான அவசர அழைப்பு: 1.5∘C எனும் வரம்பின் இலக்கைத் தாண்டுவதைத் தவிர்க்கவும், மிகக் கடுமையான தாக்கங்களைத் தணிக்கவும் பசுமைஇல்ல வாயு வெளியேற்றத்தில் உடனடியாக குறைப்பதற்கான முக்கியமான தேவையை அறிக்கைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) “உமிழ்வு இடைவெளி அறிக்கை 2024 (Emissions Gap Report 2024 )” ஆனது  உலக நாடுகள் தங்களின் அடுத்த தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளில் (NDCs) 2030ஆம் ஆண்டுக்குள் வருடாந்திர பசுமைஇல்ல வாயு வெளியேற்றத்தை 42% ஆகவும், 2035ஆம் ஆண்டுக்குள் 57% ஆகவும் கண்டிப்பாக குறைத்திடுவோம் எனக் கூட்டாக உறுதியளிக்க வேண்டிய நிலை உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. அவ்வாறு செய்யத் தவறினால், இந்நூற்றாண்டின் இறுதிக்குள் வெப்பநிலை 2.6∘C முதல் 3.1∘C வரை அதிகரிக்கும், இது அதிக பேரழிவு தருகின்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

இவ்வாறான தெளிவான பல்வேறு அறிவியல்பூர்வ எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், சில நாடுகளின் நிருவாகங்களால் காலநிலை ஒழுங்கு முறையை அனுமதிக்கின்ற ஒரு முக்கிய அறிவியல் கண்டுபிடிப்பை நீக்கம் செய்ய முன்மொழியப்பட்ட சமீபத்திய முன்னேற்றங்கள், அரசியல் விருப்பம், நடவடிக்கையின் அவசரம் ஆகியன குறித்த கவலைகளை எழுப்புகின்றன.

நிலையான எதிர்காலத்திற்கான பாதைகள்: தற்போது நம்முன் சவால்கள் அதிகமாக உள்ளனவென்றாலும், இவைகளுக்கான தீர்வுகளும் உள்ளன என்பதையும் அவ்வறிக்கைகள் வலியுறுத்துகின்றன. சூரிய சக்தி, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுதல், கார்பன் வெளியீட்டினை குறைத்தலுக்கான விலையை செயல்படுத்துதல், கார்பன் வெளியீடு இல்லாத தொழில்நுட்பங்களை அதிகரித்தல், நிலையான வளங்களின் பயன்பாட்டு நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியன மிக முக்கியமான நடவடிக்கைகளாகும். மேம்பட்ட சர்வதேச ஒத்துழைப்பிற்கான தேவை, வெப்பநிலை தணிப்பிற்கான முதலீட்டில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தல், உலகளாவிய நிதி அமைப்பின் விரிவான சீர்திருத்தங்கள் ஆகியவை சரியான மாற்றத்திற்கு மிகவும் முக்கியமானவைகளாகும் என்று எடுத்துக்காட்டுகின்றன.

சமீபத்திய காலநிலை அறிக்கைகள் ஆனவை உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள், தொழில்துறைகள், பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணந்து நம்முடைய எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான உடனடியாக வெப்பமயமாதலை தவிர்த்தல் எனும் இலட்சிய, நடவடிக்கைகளை செயற்படுத்திடுவதே நம்முடைய முதன்மைபணியாக ஏற்றுக் கொள்ள வலியுறுத்தும் ஒரு வலுவான நடவடிக்கைக்கான அழைப்பாக செயல்படுகின்றன.

வெப்பமயமாதலினால் உருவாகின்ற பாதிப்புகள் நாம் வாழும் இவ்வுலகம் முழுவதும் தவிர்க்கப்படுவதன்மூலம் இப்புவியில் வாழும் அனைத்து உயிர்களையும் காப்பாற்ற முடியும், அதன்மூலம் உலகப் பொருளாதாரமானது பாதுகாக்கப்படும், மேலும் நாம் வாழ்கின்ற இந்த புவியை மிகவும் மீள்தன்மை கொண்ட கோளாக மாற்றமுடியும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share