அமெரிக்காவில் நடந்த கோர விபத்தில் தமிழ் குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தின் லியாண்டர் பகுதியில் அரவிந்த் மணி (வயது 45) அவரது மனைவி பிரதீபா( 40) மற்றும் இவர்களது 17 வயது மகள் ஆண்ட்ரில் ஆகிய மூவரும் காரில் பயணித்துள்ளனர். மகளை கல்லூரியில் சென்று சேர்க்க அரவிந்த் சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. காரை அரவிந்த் மணி ஓட்டியுள்ளார்.
இந்த கார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற போது, விபத்தில் சிக்கியது. எதிரே வந்த மற்றொரு வாகனத்தில் மோதியதில் காரில் இருந்த மூன்று பேருமே பரிதாபமாக பலியாகி விட்டனர். அதோடு, மற்றொரு காரில் இருந்த இருவரும் இறந்தார்கள். ஆக, இந்த விபத்தில் மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 25 ஆண்டு காலத்தில் அமெரிக்காவில் நடந்த மிக மோசமான சாலை விபத்து இதுவென்று கூறப்படுகிறது. இந்த தம்பதியின் மகனான ஆதிரையன் என்ற சிறுவன் மட்டும் காரில் பயணிக்கவில்லை. இதனால், அந்த சிறுவன் மட்டும் உயிரோடு உள்ளான்.
ஒரே விபத்தில் பெற்றோரை பறிகொடுத்து விட்டு தவிக்கும் சிறுவனுக்கு உறவினர்கள், நண்பர்கள் ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர். எனினும், ஒரே சமயத்தில் தாய், தந்தை , சகோதரியை இழந்ததால், சிறுவன் பிரம்மை பிடித்தது போல இருக்கிறான்.
பெற்றோரின் இறுதிச்சடங்கு முடிந்த பிறகு, சிறுவனுக்கு கவுன்சிலிங் கொடுத்து மனதளவில் எதிர்காலத்தை எதிர்கொள்ள தயார்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, சிறுவனின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தன்னார்வலர்கள் கிரவுட் ஃபண்ட் திரட்டினார்கள். தற்போது, வரை இந்திய மதிப்பில் 5.8 கோடி ரூபாய் நிதி திரண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
”எனக்கு தமிழே பிடிக்காது காரணம் என்ன தெரியுமா?” – நடிகை சங்கீதா