பாலஸ்தீனத்தில் நடக்கும் இனக்கொலை: இந்தியா வேடிக்கை மட்டுமா பார்க்கிறது?
எஸ்.வி.ராஜதுரை
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் மட்டுமின்றி மேற்குக் கரையிலும் இஸ்ரேல் சென்ற ஆண்டு அக்டோபர் முதல் இன ஒழிப்பு ராணுவ மற்றும் ராணுவமல்லாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதைக் கண்டனம் செய்யும் வகையில் – உலகின் பல்வேறு நாடுகளில் – அதுவும் குறிப்பாக இஸ்ரேலுக்கு எல்லா வகையிலும் ஆதரவும் உதவியும் செய்து வரும் அமெரிக்கா, கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இங்கிலாந்து போன்றவை… ஆஸ்திரேலியா முதலியவற்றில் லட்சக்கணக்கான மக்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நடத்திய, நடத்தி வரும் பேரணிகளின் அளவில் பத்தில் ஒரு பகுதியைக்கூட இந்திய இடதுசாரிகளாலும் ஜனநாயக சக்திகளாலும் இதுவரை நடத்திக்காட்ட முடியவில்லை.
இந்தச் சூழலில் நேற்று (13.1.2024) உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் (அரசியல் கட்சிகள் அல்ல) பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்த வேண்டும் என்று அந்த நாட்டைச் சேர்ந்தவர்களிடமிருந்து வந்த வேண்டுகோளுக்கு இணங்க சென்னையில் அமெரிக்க தூதரகத்தின் எதிரே பி.யு.சி.எல் மனித உரிமை அமைப்பு, குடிசைவாழ் பெண்கள் அமைப்பு போன்ற சிறு அமைப்புகளும், அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு, தியாகு தலைமையிலும் தமிழ் தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்களும், மனச்சாட்சியுள்ள தனிநபர்களும் இணைந்து ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது பாராட்டுக்குரியது. அவர்களின் எண்ணிக்கை மிகச் சிறியது. ஆனால், அவர்களின் அறவுணர்வு உலக அளவிலானது. இந்த நிகழ்வை ஊடகங்கள் பதிவு செய்யுமா என்பதில்கூட நமக்கு ஐயப்பாடு உள்ளது.
இனியாவது குறைந்தபட்சமாக இடதுசாரிகளும் முற்போக்கு சக்திகளும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான ஒரு குறைந்தபட்சத் திட்டமாக இந்தியாவிலுள்ள இஸ்ரேலிய நிறுவனங்களும் அந்த நாட்டின் இனக்கொலை நடவடிக்கைக்குத் துணைபோகும் மேற்கு நாட்டு நிறுவனங்களும் தயாரிக்கும் நுகர் பொருட்களைப் புறக்கணிக்கும் இயக்கத்தையாவது நடத்த வேண்டும். அவற்றில் பின்வரும் பொருட்களும் அடங்கும்… பெப்சிகோ, கோகோ கோலா, ஸ்பிரைட், மிலோ, ஓரல்பி, எனர்ஜைசர் மேகி (நூடுல்ஸ் போன்றவை), கிட்காட் (சாக்லேட்), பார்ப்பி (பொம்மைகள்), ஹியூலெட் பக்கார்ட் (கணினி சாதனங்கள், பிரின்டர் முதலியவை), பர்கர் கிங், மெக்டொனால்டு, ஸ்டார் பக்ஸ், பீட்சா ஹட் போன்ற துரித உணவு வகைகள் , நோக்கியா, மோடோராலா (திறன்பேசிகள்), கோல்கேட், பாமோலிவ் (பற்பசை) கேர்ஃபோர் (சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகை சாமான்கள்), நைக் (காலணிகள்), கில்லெட் (பிளேடுகள் முதலியன), ஐபிஎம் நிறுவனத் தயாரிப்புகள் (தொழில்நுட்ப சாதனங்கள்), எல்.ஆர்டியல் (சருமப் பாதுகாப்பு அழகு சாதனங்கள்), இன்டெல் (கணினி சாதனங்கள்), டிம்பெர்டன் (சொகுசு வீடுகள் தயாரிப்பாளர்), சிட்டி பேங்க் (வங்கி), ஃபோர்டு செவெர்ல்ட் (கார்கள்), சிஎன்என் தொலைக்காட்சி இன்னும் எத்தனையோ…
இந்தியாவில் செயல்படும் இஸ்ரேலிய நிறுவனங்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட வேண்டும். அவை பின்வருமாறு… காற்றிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் சாதனங்களைத் தயாரிக்கும் வாட்டர் ஜென், பெரும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டேவா, சொகுசு ஹோட்டல்களைப் பெரும் நகரங்களில் நடத்தும் டான் ஹோட்டல் நிறுவனம் (இவற்றின் தலைமையகம் பெங்களூரில் உள்ளது), போபாலில் உள்ள ஆவ்கோல் நான் ஓவன்ஸ் (Avgol Nonwovens) – இது சுகாதாரம், மருத்துவம் போக்குவரத்துக்கான கார்கள் முதலியவற்றுக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கிறது. நியோ லிங்க் (NeoLync) இது எலெக்ட்ரானிக் பொருள்களைத் தயாரிக்கிறது. ரிவுலிஸ் (Rivulis) – இது சொட்டு நீர் தெளிப்பான்கள் போன்ற நீர்ப்பாசனம் தொடர்பான சாதனங்களைத் தயாரிக்கிறது. இவை போக… இந்தியாவில் நுகர் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் வேறு இஸ்ரேலிய நிறுவனங்கள் சில பின்வருமாறு… எகோபிய (Ecopia) , நான் டான் ஜெயின், அக்வைஸ், போலினெஸ், எல்பிட், ஹஜாஜ், அலுமேயர், ப்ளாஸ்ஸன், ஹூலியோட், மெட்ஸெர் ப்ளாஸ், ஐ.டி.இ., நெட்டஃபிம் முதலியன.
இஸ்ரேல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ராணுவக் கருவிகளிலும் தளவாடங்களிலும் மிகப் பெரும் பகுதியை (46%) இறக்குமதி செய்வது இந்திய அரசுதான்.
உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பெரும்பாலானவை, இஸ்ரேலுக்கு உதவியோ அல்லது வேடிக்கை பார்க்கவோ செய்து கொண்டிருக்கையில் சென்ற டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா மட்டுமே துணிச்சலாக ஐநா அவையின் கட்டுப்பாட்டிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது இனக்கொலை குற்றச்சாட்டைத் தொடுத்துள்ளது. இஸ்ரேலும் தன் இனக்கொலையை நியாயப்படுத்தும் பதிலைக் கூறியுள்ளது. இப்போது கிட்டத்தட்ட நூறு நாடுகளுக்கு மேலானவை தென்னாப்பிரிக்காவுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன (இந்திய அரசு இந்தப் பட்டியலில் இல்லை). சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் (அவர்களது பணி காலம் 9 ஆண்டுகள்) முடிவைப் பொறுத்தே இஸ்ரேல் குற்றவாளியா, இல்லையா என்பது முதல்கட்ட விசாரணையில் தீர்மானிக்கப்படும். அதன் பிறகு விசாரணை பல வருடங்கள் நடக்கும். இந்த நீதிபதிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். அவர் என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பது மோடி அரசின் விருப்பத்தைச் சார்ந்தது.
இதற்கிடையே இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களில் எண்ணற்ற கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், ஓவியர்கள் ஆகியோர் அடங்குவர். அதாவது, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் இனக் கொலையுடன் கலாச்சாரக் கொலையும் நடத்தி வருகிறது. அண்மையில் கொல்லப்பட்ட கவிஞர்களில் ஒருவர் கல்வியாளரும் பெரும் அறிஞருமான ரஃபெட் அல்-அரீர் (Refaat al-Areer)
அவர் தன் இறப்புக்கு முதல் நாள் எழுதியது ‘நான் இறந்தாக வேண்டும்’ என்ற கவிதை. இதுவரை ஏறத்தாழ 50 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, லட்சக்கணக்கானோரால் படிக்கப்பட்டு வரும் அக்கவிதையின் தமிழாக்கம்:
நான் இறந்தாக வேண்டுமென்றால்
நீ வாழ்ந்தாக வேண்டும்
என் கதையைச் சொல்வதற்கு
என் பொருட்களை விற்பதற்கு
ஒரு துண்டுத் துணியையும்
சில மென்கயிறுகளையும் வாங்குவதற்கு
(அதை நீண்ட வாலும் வெண்ணிறமும் கொண்டதாகச் செய்)
அப்போது காஸாவின் ஏதோ ஓரிடத்தில்
கண்ணில் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில்
எவரிடமும் விடை பெறாமல்
தன் தசையிடமிருந்தும்கூட
விடை பெறாமல் தன்னிடமிருந்தும்கூட
விடை பெறாமல்
பெருந்தீயை விட்டுச்சென்ற
தன் தந்தைக்காகக்
காத்துக் கொண்டிருக்கையில் –
பட்டம், நீ செய்த பட்டம்
மேலே பறந்து கொண்டிருப்பதை பார்ப்பதற்கும்
அன்பைத் திருப்பிக் கொண்டு வருகின்ற
ஒரு தேவதூதன்
அங்கிருப்பதாக
ஒரு கணம் நினைத்துக்கொள்ளவும்
நான் இறந்தாக வேண்டும்
அது நம்பிக்கையைக்
கொண்டு வரட்டும்
அது ஒரு கதையாக இருக்கட்டும்.
கட்டுரையாளர் குறிப்பு:
எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கடும் பனி, புகை: சென்னையில் விமான சேவை மீண்டும் தொடங்கியது!
வைரமுத்து வரிகளில் ‘தமிழர் திருநாள் தையே’!
எங்கெல்லாம் சென்னை சங்கமம் நடைபெறுகிறது?
சென்னை – அயோத்தி விமான சேவை எப்போது?