சிறப்புக் கட்டுரை: செவிலித் தாயை போற்றுவோம்!

Published On:

| By Balaji

நிலவளம் கு.கதிரவன்

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 7ஆம் நாள் உலக சுகாதார தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) இவ்வாண்டு செவிலியர் மற்றும் பேறுகால மருத்துவப் பணியியல் பணியாளர்களுக்கான (Nurses and Midwives) நாளாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டதின்படி, இன்று செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு பணிக்கு மரியாதை செலுத்தும் பொருட்டும், அவர்களின் பணி கட்டமைப்பு, தேவைகள், எதிர்கால திட்டங்கள் போன்றவை உலகளவில் மக்களிடத்திலும், ஊடகங்கள் மத்தியிலும் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அனுசரிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

*ஆய்ப் பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலில்

தாய்எனப் படுவோள் செவிலி யாகும். – ( தொல்: 9 – 34 )*

ADVERTISEMENT

என்று தொல்காப்பியம் கூறுகிறது. சங்க இலக்கியங்களில் அகப் பொருளில், நற்றாய் என அழைக்கப்படும் ஈன்ற தாயை விட, தலைவிக்கு அனைத்துமாக இருக்கும் வளர்த்த தாயை செவிலித் தாய் எனக் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாண்டு செவிலியர் மற்றும் பேறுகால மருத்துவயியல் பணியாளர்களுக்கான நாளாகக் கொண்டாடக் காரணம், செவிலியர்களுக்கெல்லாம் முதன்மைத் தாயாக விளங்கிய ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் 200ஆம் ஆண்டு பிறந்தநாள் 2020 மே 12 என்பதால் அவரை நினைவு கூறும் விதமாக உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார நாளான இன்றைய நாளை பரிந்துரைத்தது.

ADVERTISEMENT

உலகளவில் சுகாதாரப் பணியாளர்களில் கிட்டத்தட்ட 50% செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள். அதே வேளையில் உலகளவில் சுகாதார ஊழியர்கள் தற்போதைய பற்றாக்குறையில் 50% ஆகும். உலகளவில் மக்களின் நீடித்த உடல் நலம் மற்றும் நல் வாழ்வுக்கான இலக்கை அடைய 2030இல் உலகுக்குக் கூடுதலாக 9 மில்லியன் செவிலியர்கள் தேவைப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. காரணம் சுகாதார மேம்பாடு, நோய்த் தடுப்பு மற்றும் முதன்மையான சமூகப் பராமரிப்பிற்குச் செவிலியர்களின் பங்கு முக்கியமானதாகும். அவசர சூழ்நிலைகளில் இவர்களின் பணிகள் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. “அனைவருக்கும் சுகாதாரம்” என்ற இலக்கை அடைய வேண்டுமானால் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட, நல்ல துணையாக பணியாற்றக் கூடிய செவிலியர்கள் தேவை. இத்தகைய அங்கீகாரம் அவர்களுக்கு அளித்தால்தான் இலக்கை அடைய முடியும்.

உலகளவில் சுகாதார மற்றும் சமூகப் பணியாளர்களில் 70% பெண்கள். மற்ற அனைத்து வேலை வாய்ப்புத் துறைகளிலும் 41% அளவில்தான் பணியில் உள்ளனர். எனவே பெண் தொழிலாளர்கள் தொகுப்பில் சுகாதாரத் துறை குறிப்பிடத் தக்க பங்கை வகிக்கிறது. உலகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் செவிலியர்களின் பங்கு முக்கியமாகும். பெரும்பாலும் மக்கள் நோய்வாய்ப்படும்போது பெரும்பாலான நேரங்களில் முதலில் பார்ப்பது செவிலியர்களைத்தான். காரணம் அவர்களின் கவனிப்பும், அரவணைப்பும், தரமான சிகிச்சைக்கான துணைபுரிதலுமே முக்கிய காரணமாகும். செவிலியர்கள் உள்ளூர் சமூகத்தின் ஒரு பகுதியாக விளங்குகின்றனர். இவர்கள்தான் மக்களின் கலாச்சாரம், பலம் மற்றும் பலவீனம் அறிந்து சிகிச்சை அளிக்கின்றனர். ஒரு குடும்பத்தில் சுதந்திரமாகத் தலையிட்டு அவர்களின் சுகாதாரத் தேவைகளை வடிவமைத்து பூர்த்தி செய்கின்றனர்.

போர்க் கால சூழல், அவசர நிலை, தற்போது ஏற்பட்டிருக்கும் மருத்துவ அவசர நிலையான கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டிருக்கும் கடினமான சூழ்நிலையில் அர்ப்பணிப்பாகப் பணி செய்பவர்கள் செவிலியர்களே. இந்த அசாதாரண சூழலில் நோயாளிகளிடம் மரியாதையாகவும், சிறந்த சிகிச்சை அளிப்பதற்கான கவனிப்பும், கனிவான பேச்சும், நோயாளர்களின் ஐயங்களை களையும் விதமாகக் கேள்விகளுக்கான தீர்வும் போன்ற பல பணிகளைச் செய்கின்றனர். சில நேரங்களில் மருத்துவ ஆய்வுகளுக்கான தரவுகளைச் சேகரிக்கும் பணிகளையும் செய்கின்றனர். சுருக்கமாகக் கூறினால் செவிலியர்களின்றி எந்த பணியும் நடக்காது.

உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு, தாய் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியம், நோயாளியின் பாதுகாப்பு, அவசர காலத்திற்கான தயார்நிலை, மக்களை மையமாகக் கொண்ட தொற்று நோய்கள் மற்றும் பிற நோய்கள் தொடர்பான தேசிய மற்றும் உலகளாவிய இலக்குகளை நாம் அடைய வேண்டுமானால் செவிலியர்களின் அறப்பணி அவசியம் என்று WHO கூறுவதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

COVID-19 பணியில் மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் பல்வேறு சிரமங்களுக்கிடையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நோய்த் தொற்று ஏற்பட்ட பிறகு பல்வேறு பிரச்சினைகள். போக்குவரத்து பிரச்சினை, இந்த வைரஸ் தொற்று நோயைப் பராமரிக்க போதிய செவிலியர்கள் இல்லாத பற்றாக்குறை, மாஸ்குகள் பற்றாக்குறை, தங்களின் சுய பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளோடு பணியாற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோய்த் தொற்று மற்றும் சோர்வின் காரணமாக மரணத்தைத் தழுவும் நிலையும் ஏற்பட்டுள்ளது. நோய்த் தொற்றுக்குப் பின்னர் பல செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களைப் போன்று கிராமப்புற அளவில் சமூக சுகாதார ஆர்வலர்கள் ( ACCREDITED SOCIAL HEALTH ACTIVISTS – (ASHA) ) ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் குழந்தை பிறப்பு, நோய்த் தடுப்பு, இளம் பருவ ஊட்டச் சத்து, கருத் தடை, காச நோய் மற்றும் பல தகவல்களை இவர்கள் பராமரித்து வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் செலவழித்து கிராமங்களில் அடிப்படை சுகாதார சேவையை உறுதி செய்கின்றனர். தேசிய உலக சுகாதார திட்டத்தின் – National Rural Health Mission (NRHM) – ஒரு பகுதியாக, முழுவதும் பெண்களாக நியமிக்கப்பட்டு சமூக சுகாதார ஆர்வலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் 1000 பேருக்கு ஒரு ஆஷா பணியாளரும், பழங்குடியினர் இல்லாத பிற கிராமங்களில் 1500 மக்கள் தொகைக்கு ஒருவருமாக பணியாற்றி வருகின்றனர்.

ஒரு குடும்பத்தின் உடல் நலம், கருத் தடை, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சிறு வியாதிகளுக்கு நிவாரணம் வழங்குதல், கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் பார்த்தல், தாய்ப்பால் கொடுப்பது, குறைப் பிரசவ குழந்தைகள் மற்றும் குறைந்த எடையில் பிறந்த குழந்தைகளைக் கண்காணித்தல், வயிற்றுப் போக்கு, ரத்த சோகை, ஊட்டச் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளைக் கவனித்தல் போன்ற பணிகளைச் செய்கின்றனர். குழந்தைகளுக்கு காச நோய், மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கு முறையான தடுப்பூசிகளை உறுதி செய்தல் போன்ற பணிகளைச் செய்பவர்களும் இத்தகைய செவிலித் தாய்மார்கள்தான்.

இது தவிர புதிதாக பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு விவரம், கர்ப்பிணிப் பெண்களுக்கான ஜனனி சுரக்ஷா யோஜனாவின் விவரம், கழிப்பறை மற்றும் குடிநீர் ஆதாரங்கள் குறித்தான ஆய்வுத் தரவுகள், தொழுநோய் பற்றிய தரவுகள் ஆகியவற்றைப் பராமரித்து வருகின்றனர். தவிரவும் கிராம சுகாதார மற்றும் ஊட்டச் சத்து தின கணக்கெடுப்பு, ஹீமோகுளோபின் அளவுகளைச் சரிபார்த்தல், நோய்த் தடுப்பு செய்யப்பட்ட குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் போன்ற சுமார் 40க்கும் மேற்பட்ட விவரங்கள் அடங்கிய படிவங்களைப் பராமரிப்பவர்களும் இவர்கள்தான்.

இருப்பினும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள எண்ணிக்கையில் இந்தியாவில் செவிலியர்கள் பணியில் இல்லை. தொடர்ந்து பற்றாக்குறையாகவே உள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் குறிப்பாக நல்ல செவிலியர்களை உருவாக்குவதற்கான முதலீடு என்பது பொருளாதாரத்திற்கான நல்ல மதிப்பீடாகப் பார்க்கப்படுகிறது. சுகாதார மற்றும் சமூக நலத் துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முதலீடுகளின் விளைவாக மேம்பட்ட சுகாதார முடிவுகள், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு, மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆகியவற்றின் மும்மடங்கு மேம்பட்ட சுகாதார விளைவினை உருவாக்குவதாக, சுகாதார வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான ஐ.நா உயர்மட்ட ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இத்தகைய நிலையில் இந்தியாவில் பணிபுரிந்து வரும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ சுகாதாரப் பணியாளர்கள் எண்ணற்ற சவால்களைச் சந்தித்து வருகின்றனர். அவர்கள் பணிபுரிந்து வரும் பணியிடங்களில் சந்திக்கும் மன உளைச்சல், ஊழியர் பற்றாக்குறை, ஒத்திசைவின்மை, அங்கீகாரமின்மை, போன்ற பல பிரச்சினைகளுக்கிடையில்தான் பணியாற்றி வருகின்றனர்.

இவற்றையெல்லாம் களைய வேண்டுமானால் செவிலியர்கள் பணிபுரிந்து வரும் பணியிடங்களில் நேர்மறையான நடைமுறை சூழலை ஏற்படுத்துதல், பணிபுரிவதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், பொருட்களின் தேவையைச் சரிசெய்தல், பணியாளர் பற்றாக்குறையை போக்குதல் மற்றும் அவர்களை தக்கவைத்தல், செவிலியர்கள் கற்கும் கல்விக்கும், செய்யும் சேவைக்குமான இடைவெளியை போக்குதல், அளவிற்கும் தரத்திற்குமான பணிகளைப் பராமரித்தல் மற்றும் அவ்வப்போது மருத்துவ உலகில் ஏற்படும் மாற்றங்கள், ஆய்வுகள், ஆய்வுத் தரவுகள் போன்றவற்றை செவிலியர்களும் அறிந்து கொள்ளுமாறு செய்து அத்தகைய ஆதாரங்களைச் சார்ந்த நடைமுறை பணி போன்ற குறைகளை மத்திய மாநில அரசுகள் செய்தால் செவிலியர்கள் மற்றும் மருத்துவ சுகாதாரப் பணியாளர்களின் சேவை மேலும் சிறப்படையும். மக்கள் பயனடைவர். அனைவருக்குமான சுகாதாரம் என்ற இலக்கை எளிதில் அடைய முடியும்.

(07.04.2020 உலக சுகாதார தினம்)

கட்டுரையாளர் குறிப்பு : செஞ்சியைச் சேர்ந்த எழுத்தாளர். செஞ்சி திருக்குறள் பேரவை, தமிழியக்கம் போன்ற அமைப்புகளில் தீவிரமாக இயங்கி வருபவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share