புது வண்ணாரப்பேட்டையில் கேரம் விளையாட்டு மையத்தை கட்டி கொடுத்ததற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உலக கேரம் சேம்பியன் காசிமா நன்றி தெரிவித்துள்ளார். World champion Kasima thanks to udhayanidhi
சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மெகபூப் பாஷாவின் மகள் எம்.காசிமா. தேனாம்பேட்டை மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். கேரம் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
2024 நவம்பர் 11 முதல் 17 வரை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற 6வது உலக கேரம் போட்டியில் கலந்து கொண்ட காசிமா தனிநபர், இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்க பதக்கம் வென்று உலக சாம்பியன் ஆனார்.
இதையடுத்து தமிழ்நாடு திரும்பிய காசிமாவுக்கு சிறப்பு ஊக்க தொகையாக ரூ.1 கோடியை துணை முதல்வரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது, காசிமா புது வண்ணாரப்பேட்டையில், நவீன கேரம் பயிற்சி மையத்தை அமைத்திட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
அதனை நிறைவேற்றும் வகையில், திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் கேரம் பயிற்சி மையம் புது வண்ணாரப்பேட்டையில் உருவாக்கப்பட்டது.
இதை உதயநிதி ஸ்டாலின் கடந்த ஜூலை 5ஆம் தேதி திறந்து வைத்தார்.
அப்போது, கேரம் போட்டியில் காசிமாவை போல இன்னும் பல நூறு காசிமாக்கள் வட சென்னையில் இருந்து உருவாக வேண்டும் என்று விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்கமளித்து பேசினார் உதயநிதி ஸ்டாலின்.
இதுதொடர்பாக காசிமா கூறுகையில், “உலக அளவிலான கேரம் போட்டியில் எனக்கு ஒரு கோடி ரூபாயும், என்னோடு கலந்து கொண்ட மற்ற இரண்டு பேருக்கு தலா 50 லட்சம் ரூபாயும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்தார். கேரம் விளையாட்டில் இதற்கு முன்னதாக யாருக்கும் இப்படி ஊக்கத்தொகை கொடுத்தது கிடையாது. இங்குள்ள சிரியன் பயிற்சி மையத்தில் நாங்கள் 13 வருடமாக விளையாடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் இங்கு போதிய வசதி இல்லை. அதனால் இதை சீரமைத்து தருமாறு துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். இந்த மையத்தை கட்டிக்கொடுத்தால் மேலும் பல வீரர்கள் உருவாகுவார்கள் என்று கூறினேன். இந்த இடம் வெறும் தரையுடன் கூடிய ஓட்டு கட்டிடமாகத்தான் இருந்தது.
மழை காலத்தில் தண்ணீர் கொட்டும் விளையாட முடியாது. இதை பற்றி துணை முதல்வரிடம் கூறியதும் உடனடியாக இந்த மையத்தை கட்டி கொடுத்துள்ளார். இன்னும் 100 காசிமாக்கள் உருவாக வேண்டும் என்று துணை முதல்வர் சொன்னார். அதன்படி இங்கிருந்து 100 காசிமாக்களை உருவாக்குவோம்” என்று தெரிவித்தார். World champion Kasima thanks to udhayanidhi
