ஓய்வுக்குப் பின் எந்த ஒரு பதவியையும் ஏற்கவே மாட்டேன்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் பிஆர் கவாய்

Published On:

| By Minnambalam Desk

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மே 14-ந் தேதி பிஆர் கவாய் பதவியேற்க உள்ளார். பிஆர் கவாய் பவுத்த மத்தைத் சேர்ந்தவர். இம்மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் தலைமை நீதிபதியாவது இதுவே முதல் முறை. அதேபோல தலித் ஒருவர் இந்தியாவின் தலைமை நீதிபதியாவது இது 2-வது முறையாகும்.

பிஆர் கவாயின் தந்தை ஆர்.எஸ். கவாய், முதுபெரும் அரசியல்வாதி, முன்னாள் எம்பி. பீகார் மற்றும் கேரளா மாநிலங்களின் ஆளுநராக பதவி வகித்த சீரிய அம்பேத்கரிஸ்ட்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முன்னதாக தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் நீதிபதி கவாய் உரையாடினார். இந்த உரையாடலில் நீதிபதி கவாய் கூறியதாவது: புத்த பூர்ணிமாவுக்கு பின்னர் 2 நாட்களில் இந்த நாட்டின் தலைமை நீதிபதியாக பவுத்த மதத்தைச் சேர்ந்த நான் பொறுப்பேற்பது ஒரு எதிர்பாராத நிகழ்வு.

அரசியல் ரீதியாக எனக்கு எந்த ஒரு லட்சியமும் இல்லை. ஆகையால் பணி ஓய்வுக்குப் பின்னர் எந்த ஒரு பதவியையும் தாம் ஏற்கப்போவதும் இல்லை. முன்னாள் நீதிபதிகள், ஆளுநர்களாகப் பொறுப்பேற்பது என்பது தனிநபர் சார்ந்த விஷயம். அது குறித்து பேச முடியாது. ஆனால் நடைமுறையில் ஆளுநர் பதவி என்பதே தலைமை நீதிபதிக்கு கீழே உள்ளதுதான்.

நாடாளுமன்றம் அதிகாரம் படைத்ததா? நீதித்துறை அதிகாரம் கொண்டதா? என்கிற விவாதம் நடைபெறுகிறது. இந்த நாட்டில் அரசியல் சாசனம்தான் அனைத்துக்கும் மேலானது.

இந்த நாடு பெரும் சிக்கலில் இருக்கும் போது உச்சநீதிமன்றம் தனித்து இருந்தவிட முடியாது. உச்சநீதிமன்றமும் இந்த நாட்டின் ஒரு பகுதிதான். பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் கேட்டபோது நாங்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டோம். தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அனுமதியுடன் நீதிபதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டதுக்குப் பின் உடனடியாக, பஹல்காம் தாக்குதலில் பலியானோருக்கு 2 நிமிட அஞ்சலி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு முதலில் கண்டனம் தெரிவித்துவிட்டு உச்சநீதிமன்றம், தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.

நாம் யுத்தங்களின் அழிவுகளை ஏற்கனவே பார்த்துள்ளோம். கடந்த 3 ஆண்டுகளாக உக்ரைனில் நடைபெற்று பேரழிவைப் பார்க்கிறோம். 50 ஆயிரம் பேருக்கு மேல் உக்ரைன் போரில் உயிரிழந்துள்ளனர். அதேபோல காசா போரிலும் பல்லாயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவின் குடிமகன் என்ற வகையில் இத்தகைய யுத்தங்கள் என்பது கவலைக்குரியதுதான். இதுவரை நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். தற்போது யுத்த நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டது. இவ்வாறு நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share