மகளிர் உலகக் கோப்பை கபடியில் இந்தியா 2-வது முறையாக சாம்பியனாக மகுடம் சூட்டியுள்ளது. இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தின் டாக்காவில் மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டிகள் நவம்பர் 17-ந் தேதி தொடங்கின.
வங்கதேசம், இந்தியா, சீன தைபே, ஜெர்மனி, ஈரான், கென்யா, நேபாளம், போலந்து, தாய்லாந்து, உகாண்டா, சான்சிபார் ஆகிய 11 நாடுகள் இதில் பங்கேற்றன. லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்தியா, ஈரான், சீன தைபே, வங்கதேசம் ஆகியவை அரை இறுதியில் பங்கேற்றன.
அரை இறுதியில் ஈரானை 33-21 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வீழ்த்தியது; வங்கதேசத்தை 25-18 என்ற புள்ளிக்கணக்கில் சீன தைபே வீழ்த்தியது.
இதனையடுத்து இறுதிப் போட்டியில் இந்தியா- சீனா தைபே அணிகள் களம் கண்டன. இறுதியில்
35-28 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய மகளிர் அணி பிரம்மாண்ட வெற்றியுடன் மகுடம் சூட்டியது. கபடி மகளிர் உலகக் கோப்பை போட்டிகளில் 2-வது முறையாக சாம்பியனாகி உள்ளது இந்தியா.
இந்திய மகளிர் அணியினருக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
