ஆட்கொணர்வு வழக்கில் ஈஷா யோகா மையத்தின் மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 18) முடித்து வைத்த நிலையில், பெண் துறவிகள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ் , ஈஷா மையம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், தனது இரண்டு மகள்கள் கோவை ஈஷா யோகா மையத்துக்கு யோகா கற்க சென்ற நிலையில் அங்கேயே தங்கிவிட்டனர்.
மேலும், தனது இரு மகள்களையும் ஆசிரமத்தினர் மூளைச் சலவை செய்து, துறவறம் ஏற்கச் செய்துள்ளதாகவும், தனது இரு மகள்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பெற்றோருடன் செல்ல அனுமதிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.
அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகள் குறித்த விவரங்களையும் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக காவல் துறை, சமூக நலத்துறைகளுக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையே உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஈஷா யோகா மையம் உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, பெண் துறவிகளின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து இன்று தீர்ப்பளித்தனர்.
இதுதொடர்பாக ஈஷா யோகா மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் ஒரு அமைப்பை இழிவுபடுத்துவதற்காக இது போன்ற மனுக்களை பயன்படுத்தக் கூடாது என்று அழுத்தமாக கூறியுள்ளது. ஈஷாவில் 2 பெண் துறவிகள், அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி சந்திர சூட், ‘நீதிமன்றம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றும் அதே வேளையில், மக்கள் மற்றும் நிறுவனங்களை இழிவுபடுத்தும் வகையில் அதன் நடவடிக்கைகள் இருக்க கூடாது’ என்று குறிப்பிட்டார். மேலும், 39 மற்றும் 42 வயதுடைய இரண்டு பெண் துறவிகள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் ஈஷா அறக்கட்டளையில் தங்கியிருப்பதையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் “இரு பெண்களும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள். அவர்கள் ஆசிரமத்தில் சேர்ந்த போதும் அவர்களுக்கு 18 வயது நிறைவு பெற்றவர்களாகவே இருந்துள்ளனர். அவர்கள் ஈஷா யோக மையத்தில் தொடர்ந்து இருப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த கண்ணோட்டத்தில், ஆட்கொணர்வு மனுவினுடைய குறிக்கோள் முழுமையாக நிறைவடைகிறது. இதற்கு மேல் வேறு எந்த உத்தரவையும் உயர் நீதிமன்றம் பிறப்பித்து இருக்க வேண்டியதில்லை.
ஆட்கொணர்வு மனுக்களை அணுகும் போது ஒரு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு அரசியலமைப்பு பிரிவு 226-இல் தெளிவாக வரையறை செய்யப்பட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவைத் தொடர்ந்து, நடைபெற்று இருக்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது இந்த நீதிமன்றத்திற்கு தேவையற்றது.
இந்த நடவடிக்கைகளில் கையாளப்பட்ட விஷயத்தின் ஒரே அம்சம் ஆட்கொணர்வு மனு தொடர்பானது என்பதையும், அந்த விஷயத்தின் அம்சம் முடித்து வைக்கப்படுகிறது என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். இந்த நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்ட ஆட்கொணர்வு மனு எண் 2487 of 2024 தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த தீர்ப்பை வரவேற்ற மா மாயூ மற்றும் மா மதி ஆகியோர் பேசுகையில் “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, துறவு வாழ்க்கை வாழ்வதற்கான எங்கள் விருப்பத்திற்கு துணை நிற்கும் வகையில் வந்துள்ளதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
எங்கள் குடும்பத்தினால் ஏற்பட்ட இந்த துயரங்கள் எங்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சமயத்தில் எங்களுக்கு துணையாக நின்ற சத்குரு, அனைத்து ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். அவர்கள் எங்களின் குடும்பத்தை விட எங்களுக்கு மேலானவர்கள்” எனக் கூறியுள்ளனர்.
முன்னதாக இரண்டு பெண் பிரம்மச்சாரிகளுடன் உரையாடிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அவர்கள் இருவரும் புத்திக்கூர்மை உள்ளவர்கள் மற்றும் சுயமாக முடிவெடுக்கும் திறன் உடையவர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
தமிழக காவல்துறையும் இரண்டு பெண்களும் தங்கள் சுயவிருப்பத்தின் பேரிலேயே ஈஷாவில் வசித்து வருகிறார்கள் என்பதையும், அவர்களின் பெற்றோருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததையும் அங்கீகரித்து உள்ளது.
மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு இடையேயான சந்திப்புகள், உரையாடல்கள் ஆகியவை பல விசாரணைகள் மற்றும் CCTV காட்சிகள், 70 தொலைபேசி உரையாடல்கள் உட்பட ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் மூலம் சரிபார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்த்தாய் வாழ்த்து: ஆளுநர் மீது ஸ்டாலின் அவதூறு… பாஜக காட்டம்!
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : அனுஷம் (18.10.2024 முதல் 15.11.2024 )