சென்னை ஈசிஆரில் நடந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சூமோட்டோ வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. Women Chased by Car in ECR
ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் விரட்டி சென்று நடு ரோட்டில் வழிமறித்து நின்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Women Chased by Car in ECR
இது தொடர்பாக கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈசிஆர் கார் சேஸிங் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பெண் வழக்கறிஞர் ரேணுகாதேவி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பதிவாளருக்கு அனுப்பிய கடிதத்தில், “திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் துரத்தியது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் புகார் அளித்த போது சிஎஸ்ஆர் மட்டும் பதிவு செய்துவிட்டு எஃப் ஐஆர் பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கண்டனங்கள் எழுந்த பிறகு தான் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதோடு அந்த இரவு நேரத்தில் ஏன் வெளியே வந்தீர்கள் என்று பாதிக்கப்பட்ட பெண்களிடம் போலீஸ் அதிகாரிகள் கேட்டதாகவும் அறிகிறேன்.
பெண்களின் விவரங்களை வெளியிட்டது ஏன்? Women Chased by Car in ECR

இந்த விவகாரம் தொடர்பாக 29ஆம் தேதி தாம்பரம் காவல் ஆணையர் வெளியிட்ட பத்திரிகை செய்தி குறிப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் காரின் பெயர் போன்றவை இடம்பெற்றுள்ளது.
விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த விவரங்கள் வெளியாக வேண்டிய அவசியம் இல்லை. குற்றம்சாட்டப்பட்ட ஆளும் கட்சியை சேர்ந்தவர்களை காப்பாற்றும் நோக்கில் காவல்துறை செயல்பட்டுள்ளது.
காவல்துறை என்பது சுதந்திரமான அமைப்பு. ஆளும் கட்சியின் உத்தரவிற்கு இணங்கி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த வேளையில் பெண்களின் விவரங்களை வெளியிட்டது தொடர்பாகவும் அடையாளங்களை வெளியிட்ட அதிகாரி மீதும் தாமாக முன்வந்து நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.