இலவசப் பேருந்து பயணம்: பெண்களுக்கு சாதகமும் பாதகமும்!

Published On:

| By Kalai

தமிழக அரசின் இலவசப் பேருந்து பயணத் திட்டம் மூலம் பெண்கள் மாதம் சராசரியாக ரூ. 888 சேமிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்ற உடன் முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்ட திட்டங்களில் ஒன்று. பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம்.

ADVERTISEMENT

இந்த திட்டத்தின் மூலம், கடந்த அக்டோபர் 5ம் தேதி வரை 176.84 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.  

இந்தநிலையில், மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள், முதலமைச்சரை நேற்று(நவம்பர் 25) சந்தித்து, மகளிருக்கான இலவச பேருந்து பயண பயன்பாடு குறித்த திட்ட அறிக்கை மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான வளர்ச்சி வேறுபாடுகள் குறித்த ஆய்வறிக்கையை வழங்கினார்.

ADVERTISEMENT

மாநிலத் திட்டக் குழுவின் கூடுதல் முழுநேர உறுப்பினர் எம்.விஜயபாஸ்கர், கொள்கை ஆலோசகர்களுடன் இணைந்து, ‘அரசுக்குச் சொந்தமான பேருந்துப் போக்குவரத்துக் கழகங்களில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்த அறிக்கை’ என்ற ஆய்வை மேற்கொண்டார்.

Women benefited from free bus travel scheme

அதன்படி பெண் பயணிகள் வெவ்வேறு பிரிவுகளில் ஒரு மாதத்திற்கு ரூ. 756 முதல் ரூ.1,012 வரை சேமிப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தக்குழு, விவசாயப் பகுதியில் உள்ள பெண்கள் எப்படிப் பயணம் செய்கிறார்கள் என்பதைப் பார்க்க நாகப்பட்டினத்தையும், தொழிற்பேட்டைகளில் பெண்கள் எப்படிப் பயணம் செய்கிறார்கள் என்பதைப் பார்க்க திருப்பூர் மாவட்டத்தையும்,

முக்கிய வர்த்தக மையம் மற்றும் சுற்றுலாத்தலங்களில் பெண்களின் பயணத்தை கணிக்க மதுரையையும் தேர்வு செய்தது. இந்த மாவட்டங்களில் ஆகஸ்ட் 4, ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை கள ஆய்வு நடத்தப்பட்டது.

அதன்படி, நாகப்பட்டினம், மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள பெண் பயணிகள், இலவசப் பேருந்து பயணத் திட்டத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ. 888 சேமிக்கிறார்கள் என்று மாநிலத் திட்டக் கமிஷன் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Women benefited from free bus travel scheme

நகர்ப்புறங்களில் இருந்து வரும் பேருந்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், கிராமப்புற குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இத்திட்டத்தால் அதிக பயனடைகின்றனர் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இலவசப் பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெண்கள் 39% பட்டியல் சாதியினராகவும்,  21% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும், 18% பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் மக்கள்தொகையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இத்திட்டம் மிகுந்த பலனளிக்கிறது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் பெண் பயணிகளில் கிட்டத்தட்ட 50% பேர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Women benefited from free bus travel scheme

இந்த ஆய்வின்போது,  தங்கள் பயணத் தேவைகளுக்காக குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்திருப்பது குறைந்திருப்பதாகவும், பேருந்து மூலம் கிடைக்கும் சேமிப்பை வீட்டுச் செலவுகளுக்குப் பயன்படுத்துவதாகவும் பெண்கள் கூறியுள்ளனர்.

அதேசமயம் சில குற்றச்சாட்டுகளையும் பெண்கள் முன்வைத்துள்ளனர். இலவசப் பேருந்து பயணத்தில், ஓட்டுநர்களும், நடத்துநர்களும் சில நேரம் கண்ணியக்குறைவாக நடத்துவதாகக் கூறியுள்ளனர்.

மேலும் இலவசப் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுவதாகவும், சில பேருந்துகள்  வழக்கமான நிறுத்தங்களில் நிறுத்தப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இலவசப் பேருந்தை மட்டும் நம்பியிருப்பதால் சில நேரங்களில் போக வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் சென்று சேர முடிவதில்லை என்றும் பெண்கள் புகார் கூறியுள்ளனர்.

கலை.ரா

டெல்லி அமைச்சர்: வெளியான அடுத்த வீடியோ – நெருக்கடியில் ஆம் ஆத்மி

“இந்தியா முன் புதிய வாய்ப்புகள் குவிகின்றன” – பிரதமர் மோடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share