படிப்புக்காக வேலைக்குச் சென்றேன்… ஆனால்… : திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் வேலை செய்த பெண் பேட்டி!

Published On:

| By Kavi

DMK MLA Karunanidhi son house maid interview

DMK MLA Karunanidhi son house maid interview

படிப்புக்காக வேலைக்கு சென்ற தன்னை கடுமையாகத் தாக்கி கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்த பெண் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநரங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண், கடந்த ஏழு மாதங்களாக திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ மதிவாணன் வசிக்கும் திருவான்மியூர் வீட்டில் வேலை செய்து வந்தார்.

12ஆம் வகுப்பில் 433 மதிப்பெண் பெற்ற அந்த பெண் குடும்ப வறுமை காரணமாக வீட்டு வேலை செய்ய வந்துள்ளார்.

இந்த ஏழு மாத காலத்தில் எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மெர்லினா தன்னை கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தியதாக போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தை பாதுகாப்பு சட்டம், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் மற்றும் எவிடன்ஸ் கதிர் ஆகியோர் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அந்த பெண் அளித்த பேட்டியில், “எனக்கு நடந்தது இன்னொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாது என்பதால் இதை வெளியே சொல்கிறேன். நான் வேலைக்கு சேர்ந்த இரண்டு நாளிலேயே என்னால் வேலை செய்ய முடியவில்லை. வீட்டுக்கு செல்கிறேன் என்று சொன்னேன்.

அதற்கு எம்.எல்.ஏ.வின் மருமகள், என்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இப்போதே உன் அம்மாவை ஸ்டேஷனில் தூக்கி வைக்கிறேன் பார் என மிரட்டினார்.

நாங்கள் எதுவும் இல்லாதவர்கள் என்பதால் இந்த  மிரட்டலுக்கு பயந்து வேலை செய்தேன். அவர்களுக்கு இருக்கிற டென்ஷனை, வேலை செய்யவில்லை என்று சொல்லி என்மீது காட்டினார்கள்.

என்னை கடுமையாக அடித்து கொடுமை படுத்தினார்கள். குழம்பு கரண்டியை வைத்து ரத்தம் வர வர உடம்பு முழுவதும் அடித்தார்கள். விட்டுவிடுங்கள் என கெஞ்சியும் மனதாபிமானம் இல்லாமல் தாக்கினார்கள்.

ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணை இப்படி கொடுமை செய்தார். அவர்களுக்கு ஒரு பெண் இருக்கிறார். சமாதனமாக பேசிக்கொள்ளலாம். பணம் கொடுத்துவிடுகிறேன் என்கிறார்கள்.

இதுவே அவர்களது பெண்ணை இப்படி செய்துவிட்டு காசு கொடுத்துவிடுகிறேன், விட்டுவிடுங்கள் என்று சொன்னால் விட்டுவிடுவார்களா?.

நான் எம்.எல்.ஏ வீட்டு மருமகள்… இது எம்.எல்.ஏ வீடு என்று சொன்னால், ‘எவன் வந்து கேப்பான்’ என அழுத்திச் சொல்லுவார்.

என்னை ஒன்னும் இல்லாத நாய் என்றும், என்னுடைய சாதியை வைத்தும் கடுமையாக பேசுவார்.

என்னையும், எனது அம்மாவையும் ரெட்லைட் ஏரியாவுக்கு போங்கள் என்பார். எங்களிடம் ஒன்றும் இல்லை என்றாலும், மானம் மரியாதை இருக்கிறது.

மிளகாய் தூளை கரைத்து குடிக்க வைத்துவிட்டு வேலை செய் என்று சொல்வார்கள். என்னால் எப்படி வேலை செய்ய முடியும். காலை 6.30 மணிக்கு எழுந்தால் இரவு 1.30 மணி வரை வேலை செய்ய சொல்வார்கள்.

துடைப்பம், செருப்பை கொண்டு அடித்திருக்கிறார்கள். விட்டுவிடுங்கள் என்று கெஞ்சியும் விடவில்லை. முடியை வெட்டிவிட்டார்கள். ஹேர் ஸ்ட்ரெய்ட்னரை வைத்து சூடு வைப்பார்கள். என் தலை முழுவதும் காயமாக உள்ளது.

இவ்வளவு கொடுமை செய்துவிட்டு மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்ல மாட்டார்கள். என்ன நடந்தாலும் நானேதான் என்னை பார்த்துக்கொள்வேன்.

என்னை ரேஷன் அரிசிதான் சாப்பிட சொல்வார்கள். இரண்டு நாளுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட சொல்வார்கள்.

அங்கிருந்து வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் கூட துணி காயவைக்கவில்லை என்று சொல்லி கரண்டியை வைத்து அடித்தார்கள். இதில் எனது கண் வீங்கிவிட்டது.

எனக்கு 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டதாக ஒரு படிவத்தை தயார் செய்தார்கள். அதில்,  ‘3 வருடம் இங்குதான் வேலை செய்வேன். வேறு எங்கும் செல்லமாட்டேன், அப்படி சென்றால் என் மீதும், என் அம்மா, தம்பி மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

7 மாதங்களாக என் அம்மாவை பார்க்கவிடவில்லை. என்னை இப்படி கொடுமைப்படுத்தியதை அம்மாவிடம் சொன்னால், பள்ளிக்கு செல்லும் உன் தம்பியை லாரி ஏற்றி கொன்றுவிடுவேன் என மிரட்டினார்கள்.

போலீஸ் கூட நாங்கள் சொல்வதைதான் நம்புவார்கள் என்பார். எனது குடும்பத்துக்கு பாதுகாப்பு வேண்டும்.

படிப்புச் செலவுக்காக வேலைக்கு சென்றேன். எனது ஒரு வருட படிப்பே போய்விட்டது” என தெரிவித்தார்.

முன்னதாக, இந்த பெண்ணின் குற்றச்சாட்டுகளுக்கு கருணாநிதி எம்.எல்.ஏ மறுப்புத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் எனக்கு தொடர்பில்லை: கருணாநிதி எம்.எல்.ஏ

பிரதமர் வருகை: சென்னை, திருச்சி, ராமேஸ்வரத்தில் கடும் கட்டுபாடுகள்!

DMK MLA Karunanidhi son house maid interview

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share