ஈரோடு கூட்டத்தில் பேசிய பின் சென்னை திரும்பிய விஜய்யின் காரை பின் தொடர்ந்த கார் மோதி இரண்டு பைக்குகள் கீழே விழுந்த நிலையில், அவற்றின் மீது அடுத்தடுத்து சில வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் பெண் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
கரூர் பெருந்துயர சம்பவத்திற்கு பிறகு இன்று (டிசம்பர் 18) ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் நடந்த பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய விஜய்,”மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி தான் இந்த ஈரோடு. இந்த ஈரோடு மண்ணின் மகத்தான மனிதர் தந்தை பெரியார். விவசாயம் செழித்துள்ள இந்த ஈரோட்டில், காளிங்கராயன் அணை, காளிங்கராயன் கால்வாய், அதனை கட்டிய காளிங்கராயன், சோர்வான சமயத்தில் அவரது தாய் தைரியம் கொடுத்தார்களாம். பெற்ற தாய் கொடுக்கும் தைரியத்தை விட வேறு எதுவும் கிடையாது. எதையும் சாதித்து காட்ட முடியும்.
கொண்டையை மறைங்க சார்
வள்ளுவர் கோட்டத்திற்கு காட்டும் அக்கறையை, மக்கள் வாழ்வாதாரத்திற்கு காட்ட வேண்டும். மக்கள் நலனுக்காக கால்வாய் வெட்டி விவசாயத்தை மேம்படுத்திய காளிங்கராயனுக்கு கோடி கும்பிடுகள்.ஆனால் எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளாமல், கதையை மட்டுமே சொல்லி வருவதை, தொடர் கதையாக வைத்திருக்கிறார்கள். நூறு வருடத்திற்கு முன்பே சமுதாய நல்லிணக்கத்தை கொண்டுவர பாடுபட்டவர் தந்தை பெரியார். அண்ணா, எம்ஜிஆரும், தமிழகத்தின் பொது சொத்து. அவரை நாங்கள் பயன்படுத்துவதை யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. தமிழக வெற்றி கழகத்தை பார்த்து ஏன் பிற கட்சிகள் புலம்புகின்றன. மண்டையில இருக்குற கொண்டையை மறைங்க சார். நீங்கள் கொள்ளை அடித்து வைத்திருக்கும் காசு தான் உங்களுக்கு துணை.
திமுக ஒரு தீய சக்தி
மக்களுக்கோ பெண்களுக்கோ பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையா? என விஜய் கேட்டதற்கு, கூட்டத்தில் இருந்த மக்கள் இல்லை என பதில் அளித்தனர். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், திமுகவை தீய சக்தி என கடுமையாக சாடியதை பார்த்திருக்கிறேன். இப்போது நானும் அதையே சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி. அந்த தீய சக்திக்கும், தூய சக்தி TVK க்கும் தான் வரும் தேர்தலில் போட்டி. என்னை முடக்க நினைக்கலாம். ஆனால் இந்த மக்களை முடக்க முடியாது. அண்ணன் செங்கோட்டையன் நம்மிடம் வந்து சேர்ந்தது மிகப்பெரிய பலம். அவரைப் போல் இன்னும் பலரும் நம் கட்சியில் இணைய உள்ளனர். அவர்களுக்கு உண்டான அங்கீகாரம் கண்டிப்பாக கொடுக்கப்படும் .
என் கேரக்டரையே புரிந்து கொள்ள மாட்றியே.. என முதல்வர் சொன்னார். தமிழகத்தில் ஆட்சி செய்பவர்களும் சரி, ஒன்றியத்தில் ஆட்சி செய்தவர்களும் முதலில் என் கேரக்டரை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் வரும் 2026 தேர்தலில் புரிய வைப்பார்கள்.” என்றார்.
நீங்கதான் முக்கியம்
இறுதியாக கூட்டத்தில் பேசிய விஜய், ” நண்பா நண்பிகள்.. இங்கு வந்து பார்த்தோம் எல்லாம் நல்ல படியாக நடந்தது.. சேஃபாக வந்து விட்டு சேஃபாக வீட்டுக்கு போய் விடுங்கள்.. எனக்கு எல்லாத்தையும் விட நீங்கதான் முக்கியம். தயவு செய்து சேஃப்டியாக வீட்டிற்கு போய் வாருங்கள்.” என்றார்.
பெண் காயம்
ஆனால் விஜய் பேசி முடித்து விட்டு திரும்பிய போது அவரது காரை விஜய் ரசிகர்கள் பலர் பின் தொடர்ந்தனர். திருப்பூர் பல்லக்கவுண்டபாளையம் பகுதியில் விஜயின் வாகனத்தை பைக்கில் விரட்டிச் சென்றவர் விபத்தில் சிக்கினார்.
விஜயை பின் தொடர்ந்த கார் மோதி இரண்டு பைக்குகள் கீழே விழுந்த நிலையில், அவற்றின் மீது அடுத்தடுத்து சில வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் பெண் ஒருவர் காயம் அடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக முதல் தகவல்கள் வெளியாகி உள்ளது.
