கோவையில் பயங்கரம்: போலி நகையை அடகு வைக்க சென்ற பெண்.. விடிய விடிய கட்டி வைத்து அடித்ததால் மரணம்

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் போலி நகையை அடகு வைக்கச் சென்ற பெண்ணை நகை கடை உரிமையார் தனது நண்பர்களை வைத்து கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் 8 மாதங்களுக்கும் மேலாக சிவசெல்வி என்ற பெயரில் தங்க நகை அடகு கடை ஒன்றை நடத்தி நடத்தி வருகிறார்.

ADVERTISEMENT

இந்த கடைக்கு கடந்த டிசம்பர் 8ம் தேதி பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் தனது பெயர் சுமதி என்றும் திருவண்ணாமலையை சேர்ந்த தான் சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருவதாகவும் தனது பண தேவைக்காக தங்க நகையை அடகு வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தன்னிடம் இருந்த நகையை கொடுத்துவிட்டு 50 ஆயிரம் வரை கேட்டுள்ளார். ராஜாராமும் நகையை பெற்றுக்கொண்டு ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். இதே போல கடந்த டிசம்பர் 9 மற்றும் 12 ம் தேதியும் அதே அடகு கடைக்கு சுமதி சென்றுள்ளார். நகைகளை அடகு வைத்து 1.50 லட்சம் வரை பணம் பெற்று சென்றுள்ளார்.

பின்னர் அந்த நகையை பரிசோதனை செய்து பார்த்த போது போலி நகைகள் என்ற அதிர்ச்சி தகவல் தெரிந்ததால் கடை உரிமையாளர் ராஜாராம் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் இது குறித்து அவர் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில் கடந்த 17ம் தேதி சுமதி மீண்டும் சிவ சக்தி அடகு கடைக்கு வந்துள்ளார். அப்போது தனது கைகளில் அணிந்திருந்த வளையல்களை கழற்றி கொடுத்து ரூ.90,000 பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜாராம் சுமதியை கடையிலேயே உட்கார வைத்து விட்டு தனது நண்பர் மகேந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து மகேந்திரன் தனது நண்பர்கள் 3 பேருடன் அடகு கடைக்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை கடையின் பின் புறம் பயன்பாட்டில் இல்லாத அறைக்கு அழைத்துச் சென்று கை, கால்களை கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

பின்னர் நள்ளிரவில் அங்கு சென்று மீண்டும் பெண்ணை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் மயக்கமடைந்தார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த ராஜாராம் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை பார்த்த போது பெண் உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share