வீட்டில் வளர்த்து வந்த செல்லப்பூனை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக தமிழ்நாட்டில் தெருநாய் கடித்து, மாடு முட்டி பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது அச்சம் தரும் தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த பூனை கடித்து கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மாவட்டம் ஷிகாரிபூர் தாலுகாவில் உள்ள தர்லகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கிபாய். வயது 50.
இரண்டு மாதங்களுக்கு முன் கங்கிபாயை அவரது வீட்டில் வளரும் செல்லப்பூனை கடித்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனை சென்று பூனைக்கடிக்கு ஊசி போட்டுக்கொண்டார். அவரை தொடர்ந்து ஊசி போட்டுக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
ஆனால் ஒரு ஊசி போட்டதும், தான் குணமடைந்து விட்டதாக நினைத்த கங்கிபாய் மற்ற ஊசிகளை போடவில்லை. இந்த அலட்சியம் காரணமாக அவர் ரேபிஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுக்கு பெரும்பாலும் நாய் கடியால் தான் ரேபிஸ் தொற்று நோய் ஏற்படுகிறது. இந்நிலையில் பூனைக் கடித்ததால் இந்நோய் பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கையின்படி, உலகளவில் விலங்கு கடித்தால் ஏற்படும் காயங்களில் நாய் கடிக்கு அடுத்தபடியாக 2-50 சதவிகிதம் பூனை கடித்து தான் ஏற்படுகிறது. பூனை கடித்தால் ரேபிஸ் வைரஸ் தொற்று மற்றும் பார்டோனெல்லா, புருசெல்லா, லெப்டோஸ்பைரா மற்றும் கேம்பிலோபாக்டர் இனங்கள் தொடர்பான பல பாக்டீரியா தொற்றுகள் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் பூனை கடித்தால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு நாய் கடித்ததை விட இரண்டு மடங்கு அதிகம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம்தானே … விபரீத பி.டி ஆசிரியரின் விசித்திர செயல்!
Paris Olympics 2024: ஏமாற்றத்துடன் நிறைவடைந்த இந்தியாவின் பயணம்!