அன்றே சொன்னார் தந்தை பெரியார்….
இதை நான் எழுதத் தொடங்கும்போது JNU மாணவர் தலைவர் கன்னையா குமாருக்கு ஆறுமாத காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை இட்டுள்ள செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒன்றுமில்லாத ஒரு பிரச்சினையை பிணையில் எளிதில் வெளிவர இயலாதபடிக்கும், ஆயுள் தண்டனை வரை சிறையில் அடைக்கத்தக்கதுமான தேசத் துரோகக் குற்றமாக்கி, உலகப் புகழ்பெற்ற இந்த JNU மாணவர்களை 20 நாட்களாக வேட்டை ஆடிய வீரச் செயலை நரேந்திர மோடி அரசு வேண்டுமானால் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இன்று உலக அளவில் பா.ஜ.க அரசின் பெயர் நாறிக் கிடக்கிறது. நோம் சாம்ஸ்கி, ஜூடித் பட்லர், ஓரான் பாமுக் முதலான 400 க்கும் மேற்பட்ட உலக அறிஞர்களூம், சிந்தனையாளர்களும் இன்று மோடி அரசின் இந்த அடக்குமுறையைக் கண்டித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை குறித்து இரண்டு கேள்விகள் நம் கவனத்துக்குரியன. 1. இப்போது கைதாகியுள்ள மாணவர்கள் உண்மையிலேயே இந்தியாவுக்கு எதிரான தேசத் துரோக முழக்கங்களை இட்டவர்கள்தானா? 2. இப்படி முழக்கமிடுவது உண்மையிலேயே தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய குற்றம்தானா?
போராடும் இம் மாணவர்களோடு சென்ற வாரம் இரண்டு நாட்கள் இருந்த அனுபவத்தின் அடிப்படையில் இது குறித்துச் சில செய்திகள்:
இன்று பிரச்சினைக்குள்ளாகி உள்ள பிப்ரவரி 9ம் நாள் கூட்டம் கன்னையா குமாரோ இல்லை உமர் காலித்தோ ஏற்பாடு செய்த கூட்டமல்ல. மாவோயிஸ்டுக் கட்சியின் மாணவர் அமைப்பான DSU விலிருந்து பிரிந்து சென்ற எட்டு மாணவர்கள் முறைப்படி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அக்கூட்டத்திற்கான அனுமதி பெற்றிருந்தனர். அஃப்சல் குரு துக்கிலிடப்பட்ட நாள் அது. அதைக் கண்டித்து அந்தக் கூட்டம் நடைபெற இருந்தது.
JNU வின் தற்போதைய துணை வேந்தர் ஜெகதீஷ் குமார் , பதிவாளர் ஜுபீந்தர் சுட்ஷி இருவரும் பல்கலைக் கழகத்தில் அரசின் அநீதியான தலையீடுகளை எதிர்க்கும் துணிவு மட்டுமல்ல மனநிலையும் அற்றவர்கள். பதிவாளர் ஒரு காஷ்மீர பண்டிட். இந்நிலையில் பாஜக தரப்பில் செய்யப்பட்ட புகார் ஒன்றை ஒட்டி இந்தக் கூட்டம் தொடங்கப்பட இருந்த 10 நிமிடத்திற்கு முன் கூட்டத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதாக பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்தது.
இந்தக் கட்டத்தில்தான் JNU மாணவர் சங்கத் தலைவர் கன்னையா முதலியோர் இதில் தலையிடுகின்றனர். இப்படி ஆளும் கட்சி மற்றும் அதன் மாணவர் அமைப்பின் நெருக்குதலால் கடைசி நேரத்தில் கூட்ட அனுமதியை ரத்து செய்வதை ஏற்க இயலாது என்கிற அடிப்படையில் ஜனநாயக உணர்வும் இடதுசாரி கருத்து நிலையும் உள்ள மாணவர்கள் எல்லோரும் திரண்டுள்ளனர். பல்கலைக் கழகம் ஏற்கனவே அனுமதி அளித்திருந்த கைப்பந்துத் திடலில் அனுமதி மறுத்ததாலும், மைக் பாவிக்கக் கூடாது எனக் கூறி இருந்ததாலும், இப்போது அவர்கள் மாணவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் ‘தாபா’ அருகில் கூடி, மைக் இல்லாமல் முழக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP ஐச் சேர்ந்த மாணவர்கள் திரண்டு வந்து அருகே நின்று வன்முறையைத் தூண்டும் வகையில் எதிர் முழக்கங்களை இட்டுள்ளனர். “காஷ்மீரிகளின் இரத்தத்தால் திலகமிடுவோம்” என்றெல்லாம் முழக்கம் இடப்பட்டதாக நிகழ்வின்போது அங்கிருந்த மாணவர்கள் கூறினர். இது அங்கிருந்த காஷ்மீர் மாணவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களும் திருப்பி இந்திய அரசை எதிர்த்து எதிர் முழக்கங்களை இட்டுள்ளனர். இதைத்தான் இப்போது “இந்தியாவிற்கு எதிரான தேசத் துரோக முழக்கங்கள்” என மோடி அரசு குற்றம் சாட்டுகிறது.
உண்மையில் அங்கு கூடி இருந்தவர்களில் யார் இந்த முழக்கங்களை இட்டனர் என்பதில் இப்போது யாருக்கும் தெளிவில்லை. இடதுசாரி மற்றூம் ஜனநாயக உணர்வு மிக்க மாணவர்களின் பேரில் குற்றம் சுமத்துவதற்காக ABVP மாணவர்கள்தான் அந்த முழக்கங்களை இட்டனர் எனக் கூறி அதற்கு ஆதாரமாக சில வீடியோ பதிவுகளும் Kafila முதலான இணையத் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இன்னொரு பக்கம் கன்னையா குமார், உமர் காலித் முதலான மாணவர்கள் மீது குற்றம் சாட்டி டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள ஏழு வீடியோ பதிவுகளில் மூன்று போலியானவை என்பதும் தடயவியல் ஆய்வில் இப்போது தெரிய வந்துள்ளது.
பீகாரைச் சேர்ந்த கன்னையா குமார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான AISF ஐச் சேர்ந்தவர். அவர்கள் அப்படி ஒன்றும் காஷ்மீர் பிரிவினையை ஆதரிப்பவர்களோ, இந்திய ஒற்றுமைக்கு எதிரானவர்களோ இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
ஆனால் இந்த இடத்தில்தான் நாம் இந்துத்துவவாதிகளின் வலைக்குள் வீழ்ந்து விடாமல் கவனமாக இது குறித்த விவாதத்தை முன்னெடுக்க வேண்டும். அவர்கள் மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியைத்தான் நம்மை நோக்கி முன்வைக்கின்றனர்.
“அப்படியானால் நீங்கள் அந்த தேசத் துரோக முழக்கங்களை ஆதரிக்கிறீர்களா?” என்பதுதான் அது. ராகுல் காந்தியிலிருந்து சீதாராம் யெச்சூரி வரை அவர்கள் இதைத்தான் கேட்கின்றனர்.
இதற்கு நாம் என்ன பதில் சொல்வது?
அந்த முழக்கங்களை இட்டது நாம் இல்லையானாலும் அது நமது பதிலாக இருந்தால் நாம் அவர்கள் வலையில் வீழ்ந்தவர்களாவோம். அதன் மூலம் இத்தகைய முழக்கங்கள் தேசத் துரோகமானவை என நாம் ஏற்றுக் கொண்டவர்களாகிறோம்.எனவே, முழக்கமிட்டது யாராக இருந்த போதிலும் அது எப்படி தேசத் துரோகக் குற்றம் ஆகும் என்பதைத்தான் நாம் விவாதமாக்க வேண்டும்.
சென்ற வாரத்தில் ஒரு நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் சொன்னது போல அவர்கள் இப்படித்தான் விவாதங்களைத் திசைமாற்றி நம்மைச் சிக்க வைக்கின்றனர். தாத்ரியில் முகமது அக்லக் மாட்டுக்கறி வைத்திருந்தார் என இந்துத்துவக் கும்பலால் கொல்லப்பட்ட நிகழ்ச்சியைக்கூட அவர்கள் அப்படித்தானே எதிர்கொண்டனர். “அக்லக் வீட்டு ஃப்ரிட்ஜில் இருந்தது ஆட்டுக் கறியா இல்லை மாட்டுக்கறியா?” என்பதாக அந்த விவாதத்தை அவர்கள் மாற்றினர். இல்லை அங்கிருந்தது ஆட்டுக் கறிதான் என நாம் சொன்னால், மாட்டுக்கறி வைத்திருந்தால் கொன்றது சரிதான் என்பதை நாமும் ஏற்றுக் கொண்டவர்கள் ஆகி விடுகிறோம். வைத்திருந்தது என்ன கறியாக இருந்தாலும் இப்படி ஒரு கொலைகாரக் கும்பல் சட்டத்தைக் கையில் எடுத்ததை அனுமதியோம் என்பதுதான் நம் பதிலாக அங்கு இருந்திருக்க வேண்டும்.
ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் ஒரு தலித் மாணவன் இந்துத்துவ அரசின் கெடுபிடியால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட பிரச்சினையை கல்வித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தற்கொலைக்கு ஆளான மாணவன் தலித்தா இல்லை பிற்படுத்தப்பட்டவனா என்பதாக முன்வைத்துக் கொண்டிருக்கிறார். தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அந்த தலித் மாணவன் இதன் மூலம் ஒரு பொய் சர்டிஃபிகேட் சமர்ப்பித்த குற்றவாளியாக முன்னிறுத்தப்படுகிறது.
இன்று JNU விலும் அவர்கள் இதைத்தான் செய்கின்றனர்.
அஃப்சல் குருவைத் தூக்கிலிட்டதில் பல முறைகேடுகள் உள்ளன. அந்தத் தீர்ப்பில் மட்டுமல்ல, அவரைத் தூக்கிலிட்டதிலும் பல விதிமுறை மீறல்கள் இருந்தன. கட்டிய மனைவிக்கும், பெற்ற குழந்தைக்கும் கூடத் தெரிவிக்காமலும், கடைசி முறையாக அவர்களைப் பார்க்கக்கூட அனுமதிக்காமலும் இந்திய அரசு அவரைக் கொன்று தீர்த்தது. இதை மார்கண்டேய கட்ஜு, ஏ.பி.ஷா போன்ற நீதியரசர்களும்கூட கண்டித்துள்ளனர். இன்று காஷ்மீரில் பா.ஜ.க கூட்டணி வைத்துள்ளதே அந்த PDP கட்சியும் கூடத்தான் கண்டித்தது. ஆனால் JNU மாணவர்கள் கண்டித்தால் மட்டும் அது தேசத் துரோகமோ?
அதேபோல சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்று. அது குறித்துப் பேசுவது எப்படி தேசத் துரோகமாக இருக்க முடியும்?
இன்று JNU மாணவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு (sedition charge) சுமத்தப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலனிய அரசால் இந்திய விடுதலைப் போராளிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட சட்டம் இது. இது பற்றி இந்திய நீதிமன்றங்கள் விளக்கம் அளிக்கும்போது,, “ஒரு கருத்தை முன்மொழிந்து பேசுவது (advocacy) தேசத் துரோகக் குர்றமாகாது. அந்த அடிப்படையில் உடனடி வன்முறை அல்லது சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசைக் கவிழ்ப்பதை நோக்கித் தூண்டுவது (incitement) முதலிய நடவடிக்கைகள் மட்டுமே தேசத் துரோகத்திற்குள் கொண்டு வர இயலும்” எனத் தெளிவாகக் கூறியுள்ளன. ஆக, வெறும் பேச்சுகளை மட்டுமே வைத்து தேசத் துரோகக் குற்றம் சுமத்த இயலாது என்பது இப்படி நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக உருவான ஒரு நெறிமுறையாகக் (judicially evolved principle) கொள்ள வேண்டிய நிலை இன்று உருவாகியுள்ளது.
இந்த அடிப்படையில் பார்த்தால் பிப்ரவரி 9 அன்று JNU வளாகத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் மாணவர்கள் காஷ்மீர் பிரிவினை பற்றிப் பேசி இருந்தாலும் கூட அது தேசத் துரோகக் குற்றம் ஆகாது அன்று நடந்தது மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதி. அதைச் செய்தது பா.ஜ.க அரசும் அந்தக்கட்சியும்தான். இன்று தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள உமர்காலித்தின் தந்தை இலியாஸ் அவர்கள் எங்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கேள்வியை எழுப்பினார். JNU வளாகத்தில் தினம் எத்தனையோ போராட்டங்கள், ஆர்பாட்டங்கள நடைபெறுகின்றன. ஏன் இந்த ஆர்பாட்டத்திற்கு மட்டும் இத்தனை போலீஸ்? இத்தனை தொலைகாட்சிகள்? எதை எதிர்பார்த்து அல்லது எதை நோக்கி இத்தனை ஏற்பாடுகள் அன்று செய்யப்பட்டன?
பல்கலைக் கழகங்கள் என்பன மத நம்பிக்கைகளைப் பயிற்றுவிக்கும் மடங்கள் (monasteries) அல்ல. அவை சுதந்திரமாகச் சிந்திக்கப் பயிற்சியளிக்கும் களங்கள். சுதந்திரச் சிந்தனை ஒன்றே அறிவு வளர்ச்சிக்கு உத்தரவாதம். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் எங்கெல்லாம், எப்போதெல்லாம் சுதந்திரச் சிந்தனையும் ஜனநாயகமும் ஓங்கி இருந்தனவோ அங்கெல்லாமும், அப்போதெல்லாமும் தான் அறிவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது; கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன; பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.. மேற்கு நாடுகளின் அரசியலில் நமக்கு கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அங்குள்ள பல்கலைக் கழகங்களில் கல்வியிலும், சிந்தனையிலும் அதிக அளவுச் சுதந்திரம் (academic freedom and free thinking) உண்டு. அதன் விளைவாகத்தான் அங்கிருந்தே நவீன சிந்தனையாளர்கள், நவீன தத்துவங்கள், நவீன கண்டுபிடிப்புகள், நோபல் பரிசுகள் எல்லாம் சாத்தியமாகின்றன. கட்டுப்பெட்டித்தனம் மிக்கதாகவும் , சுதந்திரச் சிந்தனைக்குச் சாத்தியம் இல்லாததாகவும் உள்ள சவூதி அரேபியா போன்ற நாடுகளில் பொருள் வளம் இருந்தும் இத்தகைய சாதனைகள் இல்லாமற் போனதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் அப்படியான ஒரு சுதந்திரச் சிந்தனைகள் மிக்க, அரசியல் பிரக்ஞை நிறைந்த பல்கலைக் கழகமாக இருப்பது JNU தான். பல்கலைக்கழகங்களை எல்லாம் ஒற்றைச் சிந்தனை மட்டுமே உள்ள மடங்களாக மாற்ற நினைக்கும் இன்றைய மோடி அரசு JNU வைக் குறிவைப்பதன் நோக்கம் இதுதான்.
ஜனநாயகம் என்பதன் மிக அடிப்படையான அடையாளம் அதற்குள் பல கட்சிகள் செயல்படும் என்பது மட்டுமல்ல; அதற்குள் பல சிந்தனைகளும் தொழிற்படும். எந்த ஒரு கட்சியும், அது நாம் நேசிக்கும் கட்சியே ஆனாலும் அது தன் கருத்தை ஒட்டுமொத்தமான அனைத்து மக்களின் கருத்தாகவும் ஆக்க இயலாத ஒரு அமைப்பத்தான் நாம் ஜனநாயகம் என்கிறோம். மோடி அரசு தன் கருத்தே அனைத்து மக்களின் கருத்தாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. அதை நோக்கி அது நகர்வது என்பதைத்தான் நாம் பாசிசம் என்கிறோம். பாசிசம் வென்றதில்லை என்பது மட்டுமல்ல, அது வளர்ச்சியை நோக்கியோ, முன்னேற்றத்தை நோக்கியோ நகர்ந்ததும் இல்லை.
தேசபக்தி என்பது அரசையோ, கொடியையோ, தேச வரைபடத்தையோ, தேசிய கீதத்தையோ வணங்குவது அல்ல. மக்களாகிய நாம் கூடி நமக்கென ஒரு அரசியல் சட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். அதுவும் கூட தொட இயலாத புனிதம் அல்ல. அதிலுள்ள குறைபாடுகளும் அவ்வப்போது மாற்றத்துக்குரியனதான். அப்படியான நாமே உருவாக்கிய ஒரு அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருக்கும் Constitutional Nationalism தான் நமது தேசியமாக இருக்க முடியும். தேசப்படத்தையும், எல்லைகளையும், அரசையும் கும்பிடும் Statist Nationalism நமக்குத் தேவை இல்லை.
தேசியத்திற்கும் பாசிசத்திற்கும் இடையில் உள்ள கோடு மயிரிழையைக் காட்டிலும் மெல்லியது. உலகில் மிகப் பெரிய வன்முறைகள், இன அழிப்புகள், கொடூரங்கள் எல்லாம் தேசங்களின் பெயரால்தான் நடந்துள்ளன. அதனால்தான் தமிழகம் தந்த ஒரிஜினல் சிந்தனையாளரான தந்தை பெரியார் ஒரு முறை அல்ல, பலமுறை இப்படிச் சொன்னார்:
“தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்”
“நான் தேசபக்தன் எனச் சொல்வதைக் காட்டிலும் தேசத் துரோகி என அழைக்கப்படுவதில் பெருமைப் படுகிறேன்”
பெரியாரை இங்கே யாருமே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவரை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல, உயர்த்திப் பிடிப்பவர்களும் அவர் குறித்து ஒரே மாதிரிதான் கருத்துக் கொண்டிருந்தனர். பெரியார் கடவுள் பக்திக்கும் மதங்களுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் மட்டுமே எதிரி என்றுதான் இரு சாரருமே கூறினர்; நம்பினர்; நம்புகின்றனர்.
இல்லை. கடவுள் பக்தியை மட்டுமல்ல தேசபக்தியை, மொழியின் மீதான பக்தியை என எல்லாவிதமான அடையாளங்களின் மீதான பக்தியையும் கொடிதென எதிர்த்தவர் பெரியார். கடவுள் நம்பிக்கையை மட்டுமல்ல எல்லா நம்பிக்கைகளையுமே எதிர்த்தவர். ஆம். எல்லாமே மாறுபவை; மாறக் கூடியவை எனும்போது எதைத்தான் நாம் “சிக்கெனப் பற்றுவது’? ஒரு வகையில் பார்த்தால் எல்லா நம்பிக்கைகளுமே மூட நம்பிக்கைகள்தான்.பாசிசத்தை நோக்கிய நகர்வின் முதல் அடையாளம் தேசத்தின் பெயரிலான அச்சுறுத்தல்தான்.
JNU நமக்குச் சொல்லும் பாடம் இதுதான்.
நன்றி – ‘மக்கள் களம்’, மார்ச் 2016
கட்டுரையாளர் குறிப்பு -பேரா.அ.மார்க்ஸ் -தமிழகத்தின் சமூக அசைவியக்கத்தில் தொடர்ந்து மக்கள் மயப்பட்ட அரசியலை முன்னெடுத்து வருபவர். தீவிர சமூக செயற்பாட்டாளர், மனித உரிமை ஆர்வலர். உண்மை அறியும் குழுக்கள் மூலமாக மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்ந்தவர்.பெரியாரியம், அம்பேத்கரியம்,மார்க்சியம் குறித்த ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
