கலைஞர் உரிமைத்தொகை தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஜனவரி 8) முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
சட்டமன்றத்தில் இன்று (ஜனவரி 8) கேள்வி நேரத்தின் போது பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன், “தமிழ்நாட்டுப் பெண்களை தலை நிமிர வைத்த திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். அதை அறிமுகப்படுத்திய போது நம்மை விமர்சனம் செய்த கட்சிகள் கூட இன்று தங்கள் மாநிலத்தில், தமிழ்நாடு முதலமைச்சரை பின்பற்றி அங்கே மகளிர் உரிமைத் தொகையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் என்னுடைய சட்டமன்றத் தொகுதியில் செல்லும்போது பல்வேறு பெண்கள் விண்ணப்பங்களை கொடுக்கிறார்கள், கோரிக்கைகளை வைக்கிறார்கள்.
எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இதே நிலைமைதான் இருக்கும் என்று நான் கருதுகிறேன். பேரவை தலைவரிடம் கூட அவரது தொகுதியிலே பெண்கள் இதைத்தான் கேட்பார்கள். (ஆமாம் ஆமாம் என்கிறார் பேரவைத் தலைவர் அப்பாவு)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பிக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனது தொகுதியில் மட்டுமல்ல சபாநாயகர் உட்பட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இப்படித்தான் இருக்கிறது. இது என்னுடைய தனி கேள்வி அல்ல. அனைவருக்குமான கேள்வி. மகளிர் உரிமை தொகை கிடைக்க பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா? இதற்கு துணை முதலமைச்சர் ஆவன செய்வாரா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
“உங்கள் தொகுதியில் மட்டுமல்ல அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். என் தொகுதியிலும் இதைத்தான் கேட்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 54 ஆயிரத்து 31 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 67 சதவீதம் பேர் உரிமை தொகை பெற்று வருகிறார்கள். குறிப்பாக அண்ணன் ஈஸ்வரன் அவர்களின் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் மட்டும் மாதம் 44 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகையை பெற்று வருகிறார்கள்.
நாங்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஆய்வுக்கு செல்கிற போது என்னிடத்திலும், அமைச்சர்களிடத்திலும், சட்டமன்ற உறுப்பினர்களிடத்திலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக பெண்கள் விண்ணப்பங்கள் கொடுக்கிறார்கள். இது பற்றிய விவரங்களை சேகரித்து முதலமைச்சர் உடைய கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
முதலமைச்சரின் அறிவுரையை பெற்று இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாதவர்களுக்கு பலன் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நிச்சயமாக எடுப்போம்.
சென்ற முறை விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும் திட்டத்தின் விதிகளை பூர்த்தி செய்யும் மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கிட மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நடவடிக்கையின் அடிப்படையிலே ஈஸ்வரன் அவர்களின் திருச்செங்கோடு சட்டமன்ற த் தொகுதிகளும் கூடுதலான மகளிர்க்கு உரிமை தொகை வழங்கப்படும்” என அறிவிப்பு வெளியிட்டார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு, “நானும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கருப்பு சட்டை-வெள்ளை மாஸ்க்… சட்டமன்றத்தில் அதிமுகவின் அதிரடி என்ட்ரி!