வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா: குவியும் வாழ்த்துக்கள்!

விளையாட்டு

உலக தடகள ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அமெரிக்காவின் ஓரிகான் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிபோட்டி இன்று (ஜூலை 24) நடைபெற்றது.

இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, 88 புள்ளி 13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நடப்பு சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.54 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்று தனது சாதனையை தக்கவைத்துள்ளார்.

செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ்ச் 88.09 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும், ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 86.86 மீட்டர் தூரம் எறிந்து 4வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

19 ஆண்டுகளுக்கு பிறகு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “நமது புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவரால் மிகப்பெரிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துக்கள் நீரஜ் சோப்ரா. இந்திய விளையாட்டுக்கு இது ஒரு சிறப்பான தருணம். உங்களது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். உலக அரங்கில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருவதன் மூலம், இந்தியா பெருமை கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா,முன்னாள் தடகள வீராங்கனையும், மாநிலங்களவை எம்.பியுமான பி.டி.உஷா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

க.சீனிவாசன்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.