இதுதான் பிரபுதேவாவின் ‘செகண்ட் இன்னிங்ஸ்’ஸா?

Published On:

| By uthay Padagalingam

will yung mung chung make success for prabhu deva

தொண்ணூறுகளில் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய ‘சென்சேஷன்’ ஆக இருந்தவர் நடிகர் பிரபுதேவா. அவர் நடித்த படங்களில் என்ன சிறப்பு இருக்கிறது என்று ஆராயும் அளவுக்கு வித்தியாசமான ‘காம்பினேஷன்’களை தரக் காரணமாக இருந்தவர். இரண்டாயிரத்திற்குப் பிறகு அவரது தேர்வுகளும், அவரைத் தேடி வந்த வாய்ப்புகளும் சரிவர அமையாத காரணத்தால் நாயக அந்தஸ்தில் இருந்து விலகினார். will yung mung chung make success for prabhu deva

ADVERTISEMENT

பிறகு இயக்குனராக மாறி இந்தி திரையுலகிலும் புகழ் ஈட்டினார். அதன்பிறகு, மீண்டும் தமிழுக்கு ஒரு இடைவெளிக்குப் பின்னர் வந்தார். இப்போதும் அவருக்கான புகழ் எப்போது வேண்டுமானாலும் சிகரம் ஏறும் என்ற நிலையிலேயே உள்ளது.

ADVERTISEMENT

தந்தை சுந்தரத்தின் நடனக்குழுவில் ஒருவராகப் பங்கேற்று, இரண்டொரு ஆண்டுகளிலேயே ‘டான்ஸ்மாஸ்டர்’ ஆனவர். அன்றைய தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளை ஆட்டுவித்தவர். ‘பிரபுவா’ என்று ஒவ்வொருவரும் கேட்டுவிட்டு படப்பிடிப்புக்குச் செல்லுமளவுக்கு அவரது ‘கொரியோகிராஃபி’ இருக்கும். படம் வெளிவந்தபிறகு, அவர்கள் கொட்டிய உழைப்புக்கேற்ற பலன் தியேட்டர்களில் கிடைக்கும்.

ADVERTISEMENT

அந்த புகழைப் பல மடங்காக மாற்றின பிரபுதேவா திரையில் தோன்றிய ‘லாலாக்கு’, ‘ஏப்ரல் மேயில’, ‘சிக்குபுக்கு’, ‘சின்னராசாவே’ உள்ளிட்ட சில பாடல்கள். அதன் தொடர்ச்சியாக ‘இந்து’ மற்றும் ‘காதலன்’னில் பிரபுதேவா நாயகனாக நடித்ததும் மிகச்சில ஆண்டுகளில் இந்தியா முழுக்கத்தெரிந்த நட்சத்திரமாக மாறியதும் பழங்கதை.

மின்சார கனவு, விஐபி, நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில், சார்லி சாப்ளின், டைம் என்று குறிப்பிடத்தக்க படங்களைத் தந்திருக்கிறார் பிரபுதேவா.

நடன இயக்குனர், இயக்குனர் என்று வெவ்வேறு திசைகளில் அவர் புகழ் பெற்றபோதும், இன்றும் அவரது தீவிர ரசிகர்களுக்கு ஒரு வருத்தம் இருக்கிறது. அது, அவரது திறமைக்குத் தீனி போடுகிற வகையில் உரிய திரைக்கதைகள் அமையவில்லையே என்பதுதான்.

2015க்கு பிறகு அப்படியொரு மாற்றத்தை உருவாக்கும் வகையிலேயே, மீண்டும் தமிழில் பிரபுதேவா நடிக்கத் தொடங்கினார். விஜய் இயக்கிய ‘தேவி’ அப்படித்தான் வெளியானது. அந்த காலகட்டத்தில், பிரபுதேவாவின் கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படமாக ‘யங் மங் சங்’ கருதப்பட்டது.

அப்படத்தின் பூஜையின்போதே அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார் பிரபுதேவா. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் அது. நடிகை லட்சுமி மேனனின் ‘கம்பேக்’ ஆகவும் அந்த படம் குறிப்பிடப்பட்டது.

ஆனால், திட்டமிட்டவாறு ‘யங் மங் சங்’ வெளியாகவில்லை. அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்னவென்று தெரியவில்லை. இடைப்பட்ட காலத்தில் பிரபுதேவா நடித்து ஒரு டஜன் படங்கள் வந்துவிட்டன. லட்சுமிமேனன் நடிப்பில் ‘சப்தம்’ வந்தது. இயக்குனர் அர்ஜுனோ ‘சூது கவ்வும் 2’ தந்தார். ‘குட் பேட் அக்லி’, ‘மார்க் ஆண்டனி’யின் திரைக்கதை ஆக்கத்தில் பணியாற்றியிருக்கிறார்.

இப்படிப்பட்ட தகவல்கள் நமக்குத் தெரிகிற சூழலில், இப்போது ‘யங் மங் சங்’ வெளியாகிற விஷயம் தெரிய வந்திருக்கிறது. இந்த படத்தில் சித்ரா லட்சுமணன், ஆர்.வி.உதயகுமார், தங்கர்பச்சான், ஆர்ஜே பாலாஜி உட்படப் பலர் நடித்துள்ளனர்.

‘குங்க்ஃபூ’ கலையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் இந்த கதையானது மூன்று வெவ்வேறு காலகட்டத்தில் நிகழ்வதாகத் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். படம் குறித்த தகவல்கள் ‘காமெடிக்கு கியாரண்டி’ என்ற எண்ணத்தைத் தருகின்றன.

எல்லாம் சரியாக அமைந்தால், பிரபுதேவாவுக்கு ‘செகண்ட் இன்னிங்ஸ்’ஸாக ‘யங் மங் சங்’ அமையலாம். அது நிகழுமா என்று பொறுத்திருந்து காண்போம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share