Paris Olympics 2024 : தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கில் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 10) இரவு 9:30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் நடந்து வரும் பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிர் 50 கிலோ எடைப்பிரிவுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாராவுடன் மோத இருந்தார்.
ஆனால் போட்டிக்கு முன்னதாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது எடை 100 கிராம் அதிகம் இருந்ததால் அவரை தகுதிநீக்கம் செய்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தனது ஓய்வை அறிவித்த வினேஷ் போகத், தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறியதுடன், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தனக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும், நீதிபதி அனபெல் பெனட் இவ்வழக்கை விசாரிப்பார் என்றும் சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது.
அதன்படி இன்று காலை நடைபெற்ற வழக்கு விசாரணையில் வினேஷ் போகத் மற்றும் அவரது வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைத்தனர். அவர்கள் போட்டிக்கு முந்தைய நாளில் வினேஷ் உடல் எடை நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு உட்பட்டு இருந்தது என்றும், தொடர்ந்து ஆற்றலை பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் உடல் எடை அதிகரித்தது அது மோசடி அல்ல” என்று வாதிட்டனர்.
தொடர்ந்து சர்வதேச மல்யுத்த அமைப்பும் தனது வாதத்தை முன்வைத்தது.
சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அனபெல் பெனட் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா பேசுகையில், “IOA வினேஷை ஆதரிப்பது அதன் கடமையாகக் கருதுகிறது.மேலும் இந்த விஷயத்தின் முடிவைப் பொருட்படுத்தாமல் அவருக்கு உறுதியான, அசைக்க முடியாத மற்றும் அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறது. அவரது நட்சத்திர வாழ்க்கை முழுவதும் மல்யுத்த விளையாட்டில் அவர் செய்த எண்ணற்ற சாதனைகளுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். நேர்மறையான தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்” என்று உஷா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தொடரும் துயரம் : தருமபுரி மாணவிக்கு காஷ்மீரில் நீட் தேர்வு மையம்!