வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 68ஆவது படமாக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) வெளியாகிறது.
இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தயாரிப்பு நிறுவனத்தின் தகவல்படி 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கதாநாயகன் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து படம் தயாரிக்கப்பட்டது என அவரது சம்பளத்தை நேரடியாக கூறாமல் மறைமுகமாக கூறியிருக்கிறார் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாகி அர்ச்சனா கல்பாத்தி.
ஓடிடி, தொலைக்காட்சி உரிமை, திரையரங்க விநியோக உரிமை என 450 கோடி ரூபாய்க்கு கோட் படம் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.
இதில் இசை, தொலைக்காட்சி, ஓடிடி உரிமைகள் மூலம் கிடைத்த 220 கோடி ரூபாய் நீங்கலாக 230 கோடி ரூபாய் திரையரங்க வெளியீட்டில் டிக்கெட் விற்பனை மூலம் வருவாயாக எடுக்கப்பட வேண்டும்.
பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியானது. தமிழ்நாட்டில் தற்போது செயல்பாட்டில் உள்ள திரைகளின் எண்ணிக்கை 1142 என திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணி கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் 1100 திரைகளில் கோட் படம் வெளியாகிறது என ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை என்னவென்று கூறுவது என்கிறார் திருப்பூர் சுப்பிரமணி.
இன்று(செப்டம்பர் 5) தென்னிந்திய மொழிகளில் நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகர்கள் நடிப்பில் எந்தவொரு திரைப்படமும் வெளியாகவில்லை என்பதால் உலகம் முழுவதும் கோட் திரைப் படம் வழக்கத்தை காட்டிலும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.
இதன் மூலம் முந்தைய தமிழ் படங்களின் முதல் நாள் மொத்த வசூல் அளவை கோட் படம் கடந்து விடும் என்பதே விநியோகஸ்தர்கள் கணிப்பாக உள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கனா மாநிலங்களில் வெளியாகும் தியேட்டர்கள் மூலம் கிடைக்கும் வசூல் பிரதானமாக இருக்கும்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிப்புக்கு பின் வெளியாகும் படம் என்பதால் கோட் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி என்பது விஜய்க்கு முக்கியமானது.
தமிழில் 2023 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான ஜெயிலர் படத்தின் சர்வதேச வசூல் 650 கோடி ரூபாய் என்பதே சாதனையாக இன்றுவரை உள்ளது.
300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 2023 அக்டோபர் 19 ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளியான லியோ 620 கோடி ரூபாய் வசூல் செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்த வசூல் கணக்கில் ஜெயிலர், லியோ இரண்டு படங்களும் 210 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்து சமமாக இருக்கின்றன. ஜெயிலர், லியோ படங்களை காட்டிலும் அதிக திரையரங்குகளில் இன்று வெளியாகும் கோட் முந்தைய வசூல் சாதனைகளை முறியடிக்கும். அது எந்தளவிற்கு என்பதை உறுதிப்படுத்த இன்று இரவு வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
பள்ளிக்குத் தாமதமாக வருபவர்களுக்கு வழங்கப்படும் நூதன தண்டனை: மாணவிகள் போராட்டம்!