மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தனது ஒன்பதாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
கடந்த 2025-26 பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்ட நிலையில், இந்த முறையும் வருமான வரி சலுகைகள், எளிமையான வரி விதிப்பு முறைகள் மற்றும் பல்வேறு பிரிவினருக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு புதிய வரி விதிப்பு முறையில் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த 2026 பட்ஜெட்டில் வருமான வரி சலுகைகள் மேலும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த 2026 பட்ஜெட் முக்கியமாக பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டிருக்கும் என்று கூறுகின்றனர். பெரிய அளவிலான வரி விகித மாற்றங்கள் இருக்காது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். நடுத்தர குடும்பங்கள், சம்பளம் வாங்கும் ஊழியர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் (MSME) கைகளில் அதிக பணம் புழங்குவதை அரசு ஊக்குவிக்கும்.
ஏனெனில், இந்த பிரிவினரின் நுகர்வு அதிகரிப்பது இந்தியாவின் நுகர்வு சார்ந்த பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியம். இது ‘விக்சித் பாரத் 2047’ என்ற இலக்கை அடைய உதவும் என்று கூறப்படுகிறது.
2026 பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த கூட்டத்தொடரில் ஒரு இடைவேளை இருக்கும். முதல் கட்டம் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 13 வரையிலும், இரண்டாம் கட்டம் மார்ச் 9 முதல் ஏப்ரல் 2 வரையிலும் நடைபெறும். மொத்தம் 30 நாட்கள் கூட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றுவதன் மூலம் கூட்டத்தொடர் அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.
வருமான வரி என்பது ஒரு நபர் அல்லது நிறுவனம் ஈட்டும் வருமானத்தின் மீது அரசு விதிக்கும் வரி ஆகும். இது அரசின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாகும். வரி விதிப்பு முறைகள் எளிமையாக்கப்படும் பட்சத்தில், வரி செலுத்துவது மக்களுக்கு சுலபமாக இருக்கும். நிறுவனங்களுக்கு அரசு சலுகைகள் வழங்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். ‘விக்சித் பாரத் 2047’ என்பது 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் அரசின் தொலைநோக்கு திட்டமாகும்.
அதை நோக்கிய பயணத்தில் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
