மலையாள படத்துக்கு வழிவிடுமா ‘தி கோட்’?

Published On:

| By Kavi

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ், ‘மாரி, மின்னல் முரளி’ உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டொவினோ தாமஸூக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது இவர், ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ (ஏ.ஆர்.எம்) படத்தில் மூன்று விதமான கெட்டப்பில் நடித்துள்ளார். இந்த படத்தை சுஜீத் நம்பியார் எழுத்தில் அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கி உள்ளார்.

டொவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார் கீர்த்தி ஷெட்டி.

பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, ரோகினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் 3-டி தொழில்நுட்பத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளது. மலையாளம், தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என 6 மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் மூலம் லிஸ்டின் ஸ்டீபன்,டாக்டர்.ஜகாரியா தாமஸுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ஃபைவ் ஸ்டார் செந்தில் பெற்றுள்ளார்.

பிரம்மாண்ட செலவில் இப்படத்தைத தயாரித்த மலையாள நிறுவனங்களும் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமைக்காக பெரும் தொகை கொடுத்திருந்த ஃபைவ் ஸ்டார் செந்திலும் செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு திரையரங்குகள் கிடைக்குமா என கலக்கத்தில் இருந்தனர்.

செப்டம்பர் 5 ஆம் தேதி கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 2000ம் திரையரங்குகள் வரை தி கோட் படம் திரையிடப்பட்டது.

படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தால் இரண்டாம் வாரமும் திகோட் திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடும். அதனால் குறிப்பிட்ட திரைகள் கிடைக்காமல் போக கூடிய அபாயம் இருந்தது.

ஆனால் தயாரிப்பாளர்களும், தமிழ்நாடு விநியோகஸ்தரும் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

காரணம், தி கோட் படம் எதிர்பார்த்த வகையில் பிளாக்பஸ்டர் ஆகவில்லை. எனவே, மலையாள படத்துக்கு நல்ல திரையரங்குகள் கிடைக்கும் என்பதோடு செப்டம்பர் 20ஆம் தேதி அடுத்த படங்கள் வருகிற வரை இந்தப்படம் நல்ல வசூலையும் பெறும் என்று நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டிலேயே இப்படி என்றால் கேரளாவில் கேட்கவே வேண்டாம். ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நான்கு படங்கள் வெளியாகவிருக்கின்றன.

தி கோட் ஓடவில்லை எனில் இந்த வாரம் பெரும்பான்மையான திரையரங்குகளிலிருந்து அப்படம் எடுக்கப்பட்டுவிடும். அதனால் படக்குழு மிகுந்த மகிழ்சியில் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

இராமானுஜம்

பெண்ணிடம் ரூ.18 லட்சம் பறிப்பு: ஆன்லைன் டிரேடிங் மோசடி கும்பலை கூண்டோடு தூக்கிய போலீஸ் – என்ன நடந்தது?

கூடுதலாக 20 சீட்… பாஜகவினர் சிறையில்தான் : கார்கே

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share