பாஜகவிற்கு எதிரான ராஜபுத்திரர்களின் எழுச்சி…உத்திரப்பிரதேச ரிசல்ட்டை மாற்றுமா?

Published On:

| By vivekanandhan

உத்திரப் பிரதேசத்தில் எழுந்துள்ள ராஜபுத்திர சமூகத்தினரின் கலகம் பாஜகவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மேற்கு உத்திரப்பிரதேசத்தில் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாஜகவிற்கு ஓட்டு போடக் கூடாது என்று பல மகாபஞ்சாயத்து கூட்டங்களைக் கூட்டி முடிவெடுத்துள்ளனர்.

ஏப்ரல் 19 அன்று நடந்த முதல் கட்டத் தேர்தலில் உத்திரப் பிரதேசத்தில் 8 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜபுத்திரர்களின் வாக்குகள் முக்கியமாகப் பார்க்கப்படுகிற தொகுதிகளின் வாக்கு சதவீதம் குறைந்திருப்பதும் பாஜகவிற்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களுக்காக ராஜபுத்திரர்களைக் குறிவைத்து பல அவசரத் திட்டங்களை பாஜக முன்னெடுத்துள்ளது.

ADVERTISEMENT

ராஜபுத்திர சமூகத்தினரிடையே எழுந்துள்ள கோபத்திற்கு குஜராத்தைச் சேர்ந்த பாஜக மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபெல்லா பேசிய பேச்சு காரணமாக சொல்லப்பட்டாலும், ஆனால் அதற்கான துவக்கப் புள்ளி அதுவல்ல.

பாஜக உத்திரப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கு வலுவான ஆதரவு சக்தியாக திகழ்ந்தவர்கள் நில உடைமையாளர்களான ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 2013 ஆம் ஆண்டு முசாபர்நகரில் மிகப் பெரிய மதக் கலவரம் தூண்டப்பட்டு இஸ்லாமியர்கள் பெரும் தாக்குதலுக்கு உள்ளானபோது, ராஜபுத்திரர்கள் மகா பஞ்சாயத்தைக் கூட்டி பாஜகவிற்கு ஆதரவளித்தது உத்திரப்பிரதேசம் முழுவதும் மிகப்பெரும் ஆதரவு அலையை பாஜகவிற்கு உருவாக்கியது. இதன் காரணமாக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உத்திரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

Image

பாஜக ஆட்சியில் முக்கியத்துவம் இழந்தோம்!

ADVERTISEMENT

பாஜகவிற்கு முழுமையான ஆதரவு சக்தியாக இருந்த ராஜபுத்திரர்கள், இந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தங்களுக்கான முக்கியத்துவத்தை இழந்ததாகக் கருதுகிறார்கள்.

“உத்திரப்பிரதேசத்தில் உள்ள மற்ற நிலவுடமை சமூகங்களான ஜாட் மற்றும் குஜ்ஜார் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது ஆதிக்க சக்தியாக மாறிவிட்டனர், நாங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டோம்” என்பதே ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது. மேற்கு உத்திரப்பிரதேசத்தில் முக்கியமான சமூகமாக இருந்தும் அங்கு உள்ள 22 தொகுதிகளில் 1 தொகுதி மட்டுமே பாஜகவில் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்படி பல காரணங்களுக்காக ராஜபுத்திரர்கள் மத்தியில் கொதித்துக் கொண்டிருந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல்தான் மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபெல்லாவின் பேச்சு அமைந்துவிட்டது.

ராஜபுத்திரர்களைக் குறிவைத்து, ”இங்கு ராஜாக்களும் மகாராஜாக்களும் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து நடந்தார்கள். அவர்களுக்கு தங்கள் பெண்களை திருமணம் செய்து கொடுத்தனர்” என்று பேசியதுதான் இப்போது மிகப்பெரிய சர்ச்சையாக்கப்பட்டிருக்கிறது.

சஹாரன்பூர் தொகுதியில் ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று ராஜபுத்திரர்கள் மகா பஞ்சாயத்தைக் கூட்டி பாஜகவை தோற்கடிக்கும் வலிமையுள்ள வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று அறிவித்தனர். இதனையடுத்து பல சிறிய கூட்டங்கள் தொடர்ந்து பகுதி வாரியாக நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்பிறகு ஏப்ரல் 16 ஆம் தேதி மீரட்டில் கூட்டப்பட்ட மகா பஞ்சாயத்திலும்,  முசாபர்நகரில் கூட்டப்பட்ட மகா பஞ்சாயத்திலும் பாஜகவை புறக்கணிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.

 

பயன்படுத்தப்  பார்க்கும் அகிலேஷ்

இந்த சூழலில், ராஜபுத்திரர்களின் வாக்குகளை சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் எப்படியாவது கைப்பற்றுவதற்கு முயற்சித்து வருகிறது. ஏப்ரல் 15 ஆம் தேதி முசாபர்நகரில் பேசிய அகிலேஷ் யாதவ், ‘உத்திரப் பிரதேசத்திலும், குஜராத்திலும் ராஜபுத்திரர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாஜகவால் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்காக பாஜக கொடுக்கப்போகும் விலை மிகப் பெரியது. அவர்கள் பாஜகவை துடைத்தெறிய முடிவெடுத்து விட்டார்கள்’ என்று பேசியிருக்கிறார்.

முசாபர் நகர் தொகுதியில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் பாஜக வெற்றி பெற்றது. இப்போது மீண்டும் அத்தொகுதி பாஜகவில் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த சஞ்சீவ் பல்யானுக்கே மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளதால் அவரை தோற்கடிக்க வேண்டும் என மகா பஞ்சாயத்தில் பேசப்பட்டிருக்கிறது.

Image

மேலும் 2014, 2019 ஆகிய கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் காசியாபாத் தொகுதியில் பாஜக சார்பாக நின்று வெற்றி பெற்றவர் ராஜபுத்திரரான  முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங். அவருக்கு அங்கே மீண்டும்  போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக பனியா பிரிவைச் சேர்ந்த அதுல் கார்க்-கிற்கு வழங்கப்பட்டுள்ளதும் ராஜபுத்திரர்களை வெறுப்படையச் செய்துள்ளது.

மேலும் மற்றொரு முக்கியத் தொகுதியான கைரானா தொகுதியில் பாஜக சார்பாக குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த பிரதீப் செளத்ரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ராஜபுத்திரர்கள் தங்களது அடையாளமாகக் கருதும் 9 ஆம் நூற்றாண்டு மன்னரான மிஹிர் போஜ், குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று பிரதீப் செளத்ரி சொல்வது கடும் கோபத்தினை ராஜபுத்திரர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ராஜபுத்திரர்கள், குஜ்ஜார்கள் இரண்டு சமூகத்தினருமே மிஹிர் போஜ் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தொடர் வார்த்தைப் போர்களை உத்திரப் பிரதேசத்தில் நடத்தி வருகிறார்கள்.

போலீஸ், ராணுவம் போன்றவற்றில் வேலைக்கு ஆட்களை எடுக்கும்போது பாஜக ஜாட் மக்களை அதிகமாக எடுப்பதற்கு துணை போவதாக ராஜபுத்திரர்கள் மத்தியில் ஒரு விவாதம் கனன்று கொண்டிருக்கிறது. உத்திரப் பிரதேச மாநில பாஜக தலைவரும் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவரே. மேலும் மேற்கு உத்திரப் பிரதேசத்தின் முக்கிய மாவட்டங்களான முசாபர் நகர், காசியாபாத், மீரட், கெளதம புத்தர் நகர், சஹாரன்பூர், பாக்பட், ஷாம்லி ஆகிய மாவட்டங்களில் உள்ள 34 எம்.எல்.ஏ தொகுதிகளில் 2 எம்.எல்.ஏ-கள் மட்டுமே ராஜபுத்திரர்களாக இருப்பதால் அவர்கள் ஆதிக்கத்தை இழந்துவிட்டதாக உணர்கிறார்கள்.

2013 ஆம் ஆண்டு முசாபர்நகர் கலவரத்தில் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னணியில் நின்றதால், பாஜகவின் பார்வை அவர்களை நோக்கி பெரிதாகத் திரும்பியது. அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை ராஜபுத்திர சாதி அமைப்புகளின் தலைவர்கள் ஏற்கவில்லை. மேலும் சமீப காலங்களில் மேற்கு உத்திரப்பிரதேசத்தின் ஒரு பகுதி ஜாட் மண் என்று ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளால் அழைக்கப்படுவதையும் ராஜபுத்திரர்கள் விரும்பவில்லை.

இதன் காரணமாக தங்கள் சாதியின் சக்தியை ஒன்று சேர்த்து தங்கள் வலிமையை நீரூபித்துக் காட்டினால் தான், இழந்த விசயங்களை மீட்டெடுக்க முடியும் என்பதே ராஜபுத்திர சமூகத்தினர் இந்த தேர்தலில் முடிவெடுத்திருக்கக் கூடிய விஷயம்.

உத்திரப் பிரதேசத்தில் ஓ.பி.சி, தலித்துகள் மற்றும் முஸ்லீம்கள் அளவுக்கு பெரிய எண்ணிக்கை கொண்ட சமூகமாக இல்லாவிட்டாலும்,  ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உத்திரப்பிரதேசத்தில் 10% சதவீதத்திலிருந்து 13% வரை இருக்கிறார்கள்.

பாஜக எதிர்ப்பு… ஆனால் யோகிக்கு ஆதரவு! 

ராஜபுத்திரர்களுக்கு பாஜகவின் மீது வந்திருக்கிற கோபம் என்பது அரசியல் மாற்றத்திற்கான கோபமோ, சித்தாந்த ரீதியான கோபமோ அல்ல. உள்ளூர் பிரதிநிதிகளில் ராஜபுத்திரர்களுக்கு போதுமான இடம் இல்லாமல் இருப்பதே அவர்களின் கோபத்திற்கான மைய காரணமாக இருக்கிறது.

மேலும் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர். ராஜபுத்திரர்கள் கூட்டிய மகா பஞ்சாயத்துகளில் அவர்களுக்கு யோகி ஆதித்யநாத் மீது எந்த கோபமும், வருத்தமும் இல்லை என்று பேசியிருக்கிறார்கள். மகா பஞ்சாயத்துகளில் குறிப்பிட்ட எல்லா புறக்கணிப்புகளில் இருந்தும் யோகி ஆதித்யநாத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களைப் பொறுத்தவரை, யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கை பாஜக மத்திய தலைமை குறைக்கப் பார்க்கிறது, அவர் சொல்கிற எதையும் பாஜக தலைமை கேட்பதில்லை என்று சொல்கிறார்கள். டெல்லியில் அமர்ந்திருப்பவர்கள் வேட்பாளர்களை முடிவு செய்து அந்த முடிவை ராஜ்நாத் சிங் மீதும் யோகி ஆதித்யநாத் மீதும் திணிக்கிறார்கள். வி.கே.சிங்கிற்கு சீட்டு கொடுக்காததே யோகி ஆதித்யநாத்தை பலவீனமடையச் செய்வதற்குத் தான் என்கிறார்கள் அவர்கள்.

இதன் காரணமாக பாஜகவின் எழுச்சிக்கு எந்த முசாபர்நகர் மகா பஞ்சாயத்து காரணமாக இருந்ததோ, 10 ஆண்டுகள் கழித்து அதே மகா பஞ்சாயத்து பாஜகவின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும் என்று முழங்குகிறார்கள் அவர்கள். இந்த மகா பஞ்சாயத்துகளில் உத்திரப்பிரதேசத்தை தாண்டி, ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ராஜபுத்திரர்களும் பங்கேற்று வருகிறார்கள்.

ராஜபுத்திரர்களைக் குறிவைத்து பாஜக போட்ட திட்டங்கள்

இதனை எதிர்கொள்ள பல அவசரத் திட்டங்களை பாஜக தீட்டி வருகிறது. ஏப்ரல் 6 ஆம் தேதி மோடி காசியாபாத் தொகுதியில் ரோடு ஷோ நடத்திய போது யோகி ஆதித்யநாத் மற்றும் வி.கே.சிங் ஆகிய இருவரோடு இணைந்தே நடத்தினார். பாஜகவிற்கும் ராஜபுத்திர சமூகத்தினருக்கும் இடையில் எந்த பிளவும் இல்லை என்பதைக் காட்டுவதற்காகவே மோடி இதனை செய்தார் என்கிறார்கள் உத்திரப்பிரதேசத்தின் அரசியல் வட்டாரங்களில்.

PM Modi's mega roadshow in Ghaziabad gets incredible support from people

ஆனாலும் ராஜபுத்திரர்களை இந்த முயற்சி சமாதானப்படுத்தி விடவில்லை. இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் ராஜபுத்திரர்கள் வெளிப்படையாகவே பாஜகவிற்கு எதிராக இறங்கினர்.

பாஜக ராஜபுத்திரர் சமூகத்தினர் இருக்கும் கிராமங்களுக்கென பிரத்யேகமான டீம்களை உருவாக்கி, அவர்கள் அங்கேயே தங்கி தொடர் பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். மேலும் பாஜக சமீபத்தில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதன் செளஹானை கட்சியில் இணைத்துள்ளது. இவர் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும் சமாஜ்வாதி கட்சியின் நொய்டா பகுதியைச் சேர்ந்த அசோக் செளஹான், பிரதாப் சிங் செளஹான் ஆகியோரையும் கட்சியில் இணைத்துள்ளது பாஜக. இவர்களும் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் ராஜபுத்திர வாக்குகள் நிறைந்த கிராமங்களில் பாஜகவிற்கு பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.

மேலும் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த உத்திரப் பிரதேச மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பிரிஜேஷ் சிங் அவரும் நொய்டாவிலேயே தங்கி இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

யோகி ஆதித்யநாத் ராஜபுத்திரர்கள் நிறைந்த கிராமங்களில் இரண்டு பேரணிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் அச்சமூகத்தின் அறிவுத்துறையினரின் சந்திப்பிலும் கலந்துகொண்டுள்ளார்.

Image

மேலும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவரும் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது மகனும் நொய்டா எம்.எல்.ஏவுமான பங்கஜ் சிங்கை போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த மேற்கு உத்திரப்பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது பாஜக.

இப்படி பல முயற்சிகள் பாஜக தரப்பில் எடுக்கப்பட்டாலும் ராஜபுத்திரர்களின் எதிர்ப்பும் குறையாமல் கனன்று கொண்டே இருக்கிறது. உத்திரப்பிரதேசம் முழுதும் இல்லாவிட்டாலும் மேற்கு உத்திரப்பிரதேசத்தில் பாஜகவிற்கு நிச்சயமாக ஒரு பின்னடைவை இந்த விவகாரம் ஏற்படுத்தும் என்கிறார்கள் உத்திரப் பிரதேசத்தின் அரசியல் விமர்சகர்கள்.

விவேகானந்தன்

பட்டப் பகலில் கோயம்பேடு பாலத்தில்… இப்படியுமா? வைரலாகும் வீடியோ!

புது பட டிரைலரில் விஷால், சிம்புவை கலாய்த்த சந்தானம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share