’இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தா என்ன மாதிரியான படமா இருக்கும்’ என்ற எண்ணத்தை விதைக்கிற காம்பினேஷன்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது மிர்ச்சி சிவா – இயக்குனர் ராம் கூட்டணியில் வெளியாகும் ‘பறந்து போ’. இப்படம் வரும் ஜூலை 4ஆம் தேதியன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. will mirchi siva ram’s paranthu po set big hit?
இதில் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி, பின்னணிப் பாடகர் விஜய் ஜேசுதாஸ், குழந்தை நட்சத்திரம் மிதுல் ரையான், அஞ்சலி உட்படப் பலர் நடித்துள்ளனர். பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, பின்னணி இசையைக் கையாண்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
ஒரு தந்தையும் மகனும் மேற்கொள்கிற பயண அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் இது என்று சொல்லப்படுகிறது. அந்த தந்தை பொருளாதார வசதியற்றவர் என்பது கூடுதல் தகவல்.
இதுவே ‘பறந்து போ’ பயண வகைமையில் அமைந்த ‘ட்ராமா’ என்பதைச் சொல்லிவிடும். படத்தில் நகைச்சுவைக்கும் அதிக இடமிருக்கும் என்பதை மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனியின் இருப்பு உறுதிப்படுத்துகிறது.
இரண்டாண்டுகளுக்கு முன்பே இயக்குனர் ராம் படத்தில் நடிப்பதாக சிவா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தாலும், ‘எப்போ ஆரம்பிச்சாங்க.. எப்போ முடிச்சாங்க..’ என்று திரைத்துறையினரே கேட்கும் அளவுக்குச் சத்தமில்லாமல் தயாராகியிருக்கிறது ‘பறந்து போ’.

கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு வரிசையில் ஏழு கடல் ஏழு மலையை முந்தி வெளியாகிறது இயக்குனர் ராமின் இந்தப் படம். நிச்சயம் இது வேறுபட்ட அனுபவமாக இருக்கும் என்ற எண்ணம் பலமாக எழுகிறது.
வழக்கத்திற்கு மாறான அனுபவங்களைத் தருவதை எதிர்நோக்கியே வித்தியாசமான ‘காம்பினேஷன்’கள் மீது ரசிகர்கள் ‘கண்’ வைப்பார்கள். அந்த வகையில் ‘பறந்து போ’ அவர்களது நம்பிக்கையைக் காப்பாற்றுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்..!
