Thug Life: கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பாரா? கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Published On:

| By Minnambalam Desk

Kamal Haasan

Thug Life திரைப்படத்தை கர்நாடகாவில் பாதுகாப்புடன் வெளியிட உத்தரவிடக் கோரி நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று ஜூன் 10-ந் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. Will Kamal Haasan Apologize?

தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி பிறந்தது என்பது நடிகர் கமல்ஹாசனின் கருத்து. கன்னட மொழியை இழிவுபடுத்துவதும் வகையில் கமல்ஹாசன் பேசிவிட்டதாக கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அம்மாநிலத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் ஜூன் 5-ந் தேதி திரையிடமாட்டோம் என கர்நாடகா பிலிம் சேம்பர் அறிவித்தது. இதற்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார். கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை உரிய போலீஸ் பாதுகாப்புடன் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கமல்ஹாசன் அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இருந்தார். மேலும், கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் மன்னிப்பு என்கிற வார்த்தை இடம் பெறவில்லை. கமல்ஹாசனோ அல்லது வேறு யாரோ ஒருவராக நீங்கள் இருக்கலாம்.. மக்களின் உணர்வுகளைப் புண்படுத்த உங்களுக்கு எந்த உரிமையுமே இல்லை.. நிலம், நீர், மொழி (ஜலா, நிலா, பாஷா) ஆகிய 3 விஷயங்களில் மக்கள் மிகவும் உணர்வுவயப்பட்டவர்கள். இந்த மூன்றும்தான் ஒவ்வொரு குடிமக்களுக்கும் மிக முக்கியமானது.

நமது நாடு, மொழிகளின் அடிப்படையில்தான் பிரிக்கப்பட்டுள்ளது. நமது மாநிலங்கள் மொழிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. இது மொழியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

பொதுவெளியில் பிரபலமான நபர் ஒருவர் பேசும்போது, இந்த மொழி இன்னொரு மொழியில் இருந்து பிறந்தது என பேச முடியாது; எந்த ஒரு மொழியும் எந்த ஒரு மொழியில் இருந்து பிறக்க முடியாது.அப்படி ஒரு கருத்தை நீங்கள் முன்வைத்தால் அதற்கு ஆதாரம் என்ன இருக்கிறது என்பதையும் முன்வைக்க வேண்டும். இத்தகைய கருத்துகளால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது; நல்லிணக்கம் சீர்குலைந்துள்ளது. கர்நாடகா மக்கள் என்ன கேட்கின்றனர்.. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுதானே.. கேட்க வேண்டியதுதானே..

படத்தை வெளியிடுவதற்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என நீதிமன்றத்துக்கு வந்துள்ளீர்கள். இந்த சூழ்நிலையை உருவாக்கியது நீங்கள்தானே (கமல்ஹாசன்). இந்த நிலைமையை உருவாக்கியது கர்நாடகா மக்களா? இல்லையே.. கமல்ஹாசன்தானே.. அதனால் மன்னிப்பு கேட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே..

எவர் ஒருவரும் கர்நாடகா மக்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிட முடியாது. கன்னட மொழியின் தாய் தமிழ் என்று பேசுகிறீர்கள்.. எந்த அடிப்படையில் இதனை சொல்ல முடிகிறது? கமல்ஹாசன் வரலாற்று அறிஞரா? நீங்கள் ஒரு மொழியியல் அறிஞரா? எந்த அடிப்படையில் இந்த கருத்தை கமல்ஹாசன் முன்வைத்தார்?

1950-ம் ஆண்டு சி.ராஜகோபாலாச்சாரியார், இதேபோல கன்னடம் மொழி தமிழ் மொழியில் இருந்து பிறந்தது என கருத்தை தெரிவித்தார். இது தொடர்பாக அப்போது உடனடியாக சி.ராஜகோபாலச்சாரியாருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஏற்று உடனே ராஜகோபாலாச்சாரியார் மன்னிப்பு கேட்டார்.

75 ஆண்டுகளுக்குப் பின்னர் அதேபோல ஒரு கருத்து மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. அன்று சி. ராஜகோபாலாச்சாரியார் மன்னிப்பு கேட்டார்.

இன்று நீங்கள் வணிக நோக்கத்துக்காக நீதிமன்றத்தை நாடி உள்ளீர்கள். உங்கள் திரைப்பட வெளியீடு சுமூகமாக இருக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளீர்கள். உங்கள் படத்துக்கு கர்நாடகா மாநில போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என கேட்கிறீர்கள். இவ்வளவு சூழ்நிலையையும் உருவாக்கியது நீங்கள்தானே.. இதற்கு நீங்கள்தான் பொறுப்பு.. ஒரு மன்னிப்பு எல்லாவற்றையும் சரி செய்துவிடுமே..

இந்தப் படத்தின் முக்கியத்துவம் பற்றி எல்லாம் குறிப்பிட்டிருக்கிறீர்கள் பிறகு ஏன் இப்படி ஒரு கருத்தை முன்வைக்க வேண்டும்? நாக்கு பிறழ்வால் எதனையும் பேசிவிட முடியாது; பேசிய வார்த்தைகளை திரும்பப் பெறவும் முடியாது. கர்நாடகாவில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்.. ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்கிறீர்கள். நீங்கள் மன்னிப்பு கேட்பதற்கு இன்னமும் காலம் இருக்கிறது என கூறி வழக்கு விசாரணையை ஜூன் 10-ந் தேதிக்கு ஒத்தி வைப்பதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இன்றைய விசாரணையின் போது கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பாரா? கர்நாடகா உயர்நீதிமன்றம் என்ன உத்தரவைப் பிறப்பிக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share