சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதுவரை 13 நாள் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 22 தங்கம், 34 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 95 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, பதக்கப் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இம்முறை இந்தியா ஆசிய போட்டிகளில் 100 பதக்கங்களை வெல்லுமா என்ற கேள்வி விளையாட்டு ஆர்வலர்களிடையே அதிகரித்துள்ளது.
அந்த கேள்விக்கான பதில்.. ஆம்! இம்முறை இந்தியா 100-க்கும் அதிகமான பதக்கங்களை வென்று சாதனை படைக்க உள்ளது.
இதுவரை, இந்திய வீரர், வீராங்கனைகள் 95 பதக்கங்களை வென்றுள்ள நிலையில், மேலும் 7 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.
இந்தியா உறுதி செய்துள்ள 7 பதக்கங்கள் எவை?
1) ஆடவர் கிரிக்கெட் பிரிவில், இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்த பிரிவில் குறைந்தபட்சம் இந்தியா வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், இந்தியா ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

2) பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் நட்சத்திர சாத்விக் – சிராக் இணை, மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
3, 4) கபடியில், இந்திய ஆடவர், மகளிர் என 2 அணிகளுமே 2 பதக்கங்களை உறுதி செய்துள்ளன. இறுதிப்போட்டியில், தங்கப் பதக்கத்திற்காக இந்திய ஆடவர் அணி சீன தைபே அணியையும், மகளிர் அணி ஈரான் அணியையும் எதிர்கொள்ள உள்ளது.
5, 6) வில்வித்தை விளையாட்டில், ஆடவர் காம்பௌண்ட் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில், இந்தியாவின் ஓஜஸ் டியோடேல் மற்றும் அபிஷேக் வர்மா ஆகிய இருவரும் மோதிக்கொள்ள உள்ளனர்.
இதன்மூலம், தங்கம் மற்றும் வெள்ளி என 2 பதக்கங்களும் இந்தியாவுக்கு உறுதியாகியுள்ளது.

7) வில்வித்தை மகளிர் காம்பௌண்ட் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியாவின் ஜோதி வெண்ணம், மேலும் ஒரு பதக்கத்தை இந்தியாவுக்கான உறுதி செய்துள்ளார்.
இதன்மூலம், இந்த 19 வது ஆசிய போட்டிகளில் மேலும் 7 பதக்கங்களுடன் இந்தியா குறைந்தபட்சம் 102 பதக்கங்களை வெல்ல உள்ளது. மேலும், 100 பதக்கங்கள் என்ற அந்த மேஜிக் எண்ணையும் கடக்க உள்ளது. முன்னதாக, 2018 ஆசிய போட்டிகளில், 70 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிக் பாஸ் வீட்டுக்கும் காலை உணவு போடலாம் சிஎம் சார்: அப்டேட் குமாரு!
