INDvspak : மகளிர் ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று (அக்டோபர் 5) மோதுகின்றன.
ஐசிசி 13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
குவஹாட்டியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற தொடக்கப் போட்டியில் இலங்கை அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக் கண்டது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய மகளிர் அணி.
அதே போன்று தன்னுடைய முதலாவது ஆட்டத்தில் வங்கேதசத்தை சந்தித்த பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் மகளிர் அணி, 129 ரன்னில் சுருண்டதுடன் 7 விக்கெட் வித்தியாத்தில் மோசமான தோல்வியை கண்டது.
இந்த நிலையில் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
சமீபத்தில் அமீரகத்தில் நடந்த ஆண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 3 முறை சந்தித்த இந்தியா அணி எளிதாக வென்றது. மூன்று போட்டியிலும் பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் அணியினருடன் கைலுக்குவதை இந்திய அணியினர் தவிர்த்தனர். இது சர்வதேச கிரிக்கெட் களத்தில் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.

மேலும் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் மந்திரியுமான மொசின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற இந்திய அணி மறுத்து விட்டது.
இதே நிலை இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மகளிர் உலகக்கோப்பை போட்டியிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 11 முறை சர்வதேச ஒருநாள் போட்டியில் மோதி இருக்கின்றன. இதில் அனைத்திலும் இந்தியாவே வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
எனவே இந்த போட்டியிலும் வெற்றி பெற இந்தியாவும், தனது முதல் வெற்றிக்காக பாகிஸ்தானும் போராடும் என்பதை உறுதியாக நம்பலாம்.
இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்புகிறது.
