Tamil Nadu bus strike as planned
திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதிய பலன்களை தர வேண்டும். வாரிசுதாரர்களுக்கு வேலை நியமனம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடந்த டிசம்பர் 19-ம் தேதி நோட்டீஸ் வழங்கி இருந்தது.
இதையடுத்து தொழிலாளர் நல இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து நேற்று (ஜனவரி 4) இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் போக்குவரத்து கழகம் சார்பில் மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பின் ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் மற்றும் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஓய்வு பெற்ற நிர்வாகிகளுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை பொங்கலுக்கு முன்பாக நிறைவேற்றி தாருங்கள் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அதற்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என, போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்த விதமான விடுப்புகளையும் தவிர்த்து சீரான பேருந்து இயக்கம் நடைபெற வேண்டும். சேம, தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து தொழிற்சங்கங்கள், ”வரும் 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்.
முறையான ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கியே வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையின் உத்தரவு எந்த வகையிலும் எங்களது போராட்டத்தை பாதிக்காது”, என தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கங்களின் இந்த அறிவிப்பு குறித்து போக்குவரத்து கழக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ”போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இப்போதைய சூழ்நிலையில் பொங்கல் கழித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறினோம். ஆனால் அதை தொழிற்சங்கத்தினர் ஏற்க மறுத்து 9-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் என்று அறிவித்து உள்ளனர்.
இதை சுமூக நிலைக்கு கொண்டு வர தொழிற்சங்கங்களுடன் பேசிவிட்டு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவோம். பின்னர் அதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
விரைவு பேருந்துகள் இயக்குவதில் பிரச்சினை இருக்காது. அவற்றை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம். இதனால் முன்பதிவு செய்த பயணிகளுக்கு சிரமம் எதுவும் இருக்காது.
மற்ற போக்குவரத்து கழகங்கள் சிலவற்றில் தொழிற்சங்கங்கள் பங்கெடுக்க வாய்ப்பு உண்டு. ஆனாலும் பயணிகளுக்கு சிரமமின்றி என்ன செய்ய முடியுமோ அதை அரசு நிச்சயம் செய்யும்.
தற்போது பொங்கலுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்குவது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள குறைகளை சரி செய்வது, வருகின்ற ஜனவரி 7 மற்றும் 8-ம் தேதிகளில் உலக முதலீட்டாளார்கள் மாநாடு என முக்கிய பணிகள் இருக்கின்றன.
இதனால் தான் பொங்கல் கழித்து பேசிக்கொள்ளலாம் என கூறி இருந்தோம்,” என தெரிவித்து உள்ளார்.
தொழிற்சங்கங்களின் இந்த போராட்டத்தால் பொங்கலுக்கு ஊருக்கு செல்லும் பயணிகள் மத்தியில் தற்போது லேசான அச்சம் ஏற்பட்டுள்ளது.
விரைவில் அரசு இதில் தலையிட்டு இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என, பொதுமக்கள் சமூக வலைதளங்கள் வழியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம்!
பிறந்தநாளன்று கலைஞர் நினைவிடத்தில் கனிமொழி எம்.பி மரியாதை!
Tamil Nadu bus strike as planned
