தவெக கட்சி மாநாட்டில் தன்னை தூக்கி வீசியதாக அக்கட்சியின் தொண்டர் இன்று (ஆகஸ்ட் 26) அளித்த புகாரின் பேரில் விஜய் மற்றும் பவுன்சர் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு கடந்த 21ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அப்போது ரேம்ப்வாக் வந்த விஜய்யை தொட முயன்ற கட்சியின் தொண்டர்களை அங்கிருந்த பவுன்சர்கள் தூக்கி வீசிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அதில், அப்படி தூக்கி வீசப்பட்டவர்களில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பகுதியை சேர்ந்த பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் (வயது 24) என்பவரும் ஒருவர்.

எனினும் சில நாட்களுக்கு முன்னதாக ’தூக்கி வீசப்பட்டது நான் இல்லை’ என்று வீடியோ வெளியிட்டிருந்தார் சரத்குமார்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக, ”தவெக கட்சியினர் சமாதான பேச்சில் ஈடுபட்டதால் கட்சிக்கு அவப்பெயர் வர கூடாது என்பதால்தான் நான் மறுப்பு வீடியோ வெளியிட்டேன். ஆனால் அதன்பின்னர் கட்சியினர் யாரும் கண்டு கொள்ளவில்லை” என்று கூறி, இன்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலமுருகனை நேரில் சந்தித்து பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.
அதில், “நான் தமிழக வெற்றி கழக மாநட்டிற்கு கடந்த 21.06.225 வியாழன் அன்று சென்றிருந்தேன். மாநாட்டின் முன் வரிசையில் தலைவர் விஜய் நடந்து வரும் பாதையின் அருகில் நான் நின்று கொண்டிருந்த போது, தலைவர் விஜய் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அவரை பார்த்த ஆர்வத்தில் நடைமேடையில் நான் ஏறியவுடன், தலைவருடன் வந்த பவுன்சர்கள் என்னும் குண்டர்களால் தூக்கி வீசப்பட்டதில் எனது மார்பகம் வலது விலா எலும்பு அடிபட்டு வலி அதிகமாக உள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன்.
இதுகுறித்து கட்சி தலைமையிடம் பேசுவதாக கூறி தவெக பெர்ம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் என்னிடம் சமரசம் பேசினார்கள். ஆனால் அதன்பிறகு உதவிக்கு கூட யாரும் என்னை நேரில் வந்து பார்க்க தவறிவிட்டார்கள். என்னை கட்சிக்கு எதிராக பேசாமல் பார்த்துக் கொண்டார்களே தவிர எனக்கு எந்த விதமான உதவியும் செய்யவில்லை.

எனவே என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் தூக்கி வீசிய பவுன்சர், அங்கிருந்த தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
சரத்குமாரின் இந்த புகாரையடுத்து தவெக தலைவர் விஜய் மற்றும் அந்த பவுன்சர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமையிடத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
