உதய் பாடகலிங்கம்
ஆராதனை செய்வதற்கும் நேசமிகுதியால் வெறி கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நாம் முன்மாதிரியாகக் கொண்ட நபரின் பார்வை நேரடியாகப் படியும்போது, நம்மோடு உறவுப் பிணைப்பைப் பேணும் அவரது பண்புக்கு நன்றி சொல்ல இயலாதபோது, இதுவரை சந்தித்த மனிதரில் இருந்து வேறுபட்டு புனிதராகத் தென்படும்போது, அவரை ஆராதிப்போம்; அது மிகுதியாகி அவர் மீது வெறி கொள்வோம்.
சினிமா, அரசியல், அறிவியல், ஆன்மிகம் தொடங்கிப் பல துறைகளுக்கும் இது பொருந்தும். கல்வியறிவும் வசதி வாய்ப்புகளும் வந்தபிறகு, நிச்சயமாக இது தொடராது. ஆனால், சினிமாவில் மட்டும் இப்படி வெறி கொண்டு திரிபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிகரித்து வருகிறது. அவர்களை ரசிகர்கள் என்றும், அவர்கள் கூட்டாகச் செயல்படுவதை ரசிகர் மன்றங்கள் என்றும் வரையறுத்து வைத்திருக்கின்றனர்.
தங்களது ஆதர்ச நட்சத்திரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றிருக்கும் இந்த ரசிகர்கள், தங்களையே இழக்கத் தயாராக நிற்பதைத்தான் எந்த வகையில் ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை.
அஜித் நடித்த ‘துணிவு’ படத்தின் அதிகாலைக் காட்சியை ரசிக்கச் சென்ற ரசிகர் ஒருவர், ஓடும் கனரக வாகனத்தில் இருந்து விழுந்து பலியான சம்பவமே இந்த எண்ணங்களை நம்முள் எழுப்புகிறது.
என்ன வேண்டும் இவர்களுக்கு?
தமிழ் திரைத்துறையைப் பொறுத்தவரை, பாகவதர் காலத்தில் இருந்தே ரசிக ஆராதனை தொடர்ந்து வருகிறது. எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் அது ஒரு வெறியாக மாறியது என்றால் மிகையல்ல. வெறுமனே படங்கள் சார்ந்த விமர்சனங்களாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட ரீதியில் அவர்களைப் பற்றி அவதூறு செய்ததும் மோதியதும் திரை வரலாற்றின் கருப்புப் பக்கங்கள். எம்ஜிஆரும் சிவாஜியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தி நோக்கப்பட்டதும் அதன் பின்னிருந்தது.
தொழில் போட்டியை மீறி இருவருமே ஒருதாய் மக்களாகப் பழகியவர்கள் என்றபோதும், ரசிகர்கள் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டதில்லை. இவ்வளவுதான் என்று சொல்லமுடியாதபடி எத்தனையோ மோதல்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.
பிரமாண்ட பேனர்கள், விளம்பர சுவரொட்டிகள் தொடங்கி எந்நேரமும் திரையரங்கே கதி என்று கிடந்த ரசிகர்கள் இருவருக்குமே உண்டு. இன்னொரு நட்சத்திரம் சம்பந்தப்பட்டதைக் கிழித்தெறிந்ததும் உண்டு. ஒருவரது படத்தை இன்னொருவரின் ரசிகர்கள் பார்த்துவிட்டு ‘நல்லாயில்ல’ என்று சொன்னதுண்டு.
முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டுமென்ற ஆவலில், டிக்கெட் பெறச்செல்லும் நடைபாதைக் கூண்டில் இரவிலேயே போய் அடைந்து கொண்டவர்களும் உண்டு. வியர்வை ஆறாகப் பெருகி, சட்டை கிழிந்து, உடல் வதைபட்டு தலை மீது ஏறிச் சென்றவர்களாய் சக ரசிகனாய் மன்னித்து, படம் பார்த்து பரவசப்பட்ட நாட்களும் உண்டு. எம்ஜிஆரும் சரி, சிவாஜியும் சரி, அந்த ரசிகர் மன்ற அத்துமீறல்கள் குறித்து பொதுவெளியில் பேசியதே இல்லை. அதனாலேயே, ரசிகர்களை வைத்து நட்சத்திரங்கள் ஆதாயம் தேடுவதாகப் பேச்சும் பூதாகரமானது.
ரஜினி, கமல் காலத்திலும் மேற்கண்ட ரசிகர் மன்ற ஆராதனையும் வெறியும் தொடரத்தான் செய்தன; தங்களுக்கு பிடித்த நட்சத்திரத்தைக் கண் மூடித்தனமாகப் போற்றிய விதம் ‘என்ன வேண்டும் இவர்களுக்கு’ என்று சாதாரண மக்களைப் புலம்ப வைத்தது. அது அஜித், விஜய் காலத்திலும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது நேரிலும் சமூக வலைதளங்களிலுமாக..!
ரசிகர் மன்றங்கள் என்ற விஷயத்தைப் பொறுத்தவரை பரிணாம வளர்ச்சி என்பதே இல்லை என்றும் ஆயிற்று..!
உயிர் முக்கியமில்லையா?
மன்றம் என்பதற்கு ஏதேனும் ஒரு நோக்கோடு இயங்கும் குழு அல்லது அமைப்பென்று விளக்கம் கிடைக்கிறது. அப்படியானால், இந்த ரசிகர் மன்றங்களின் நோக்கம் என்ன? தங்களது நட்சத்திரத்தை ஆராதிப்பதா அல்லது அவர்கள் மீது வெறி கொண்டலைவதா?
எந்த தைரியத்தில் இந்த ரசிகர்கள் பல அடி உயர கட் அவுட்களில் ஏறி மாலையிடுகிறார்கள், பால் ஊற்றி போற்றுகிறார்கள், தங்களிடம் இருக்கும் அனைத்து பணத்தையும் அள்ளித்தர தயாராக இருக்கிறார்கள்? தங்களது பிரச்சனைகளையும் கவலைகளையும் மறந்து இரண்டரை மணி நேரம் இருட்டரங்கொன்றில் கட்டிப்போடும் ஒருவரது இருப்புக்காகத் தன்னையே இழப்பதா?
சாதாரண மனிதர்கள் பலருக்கு, இந்த ரசிக பட்டாளத்தைப் பார்த்துக் கேட்பதற்கு இது போன்ற பல கேள்விகள் இருக்கின்றன. ‘படம் பார்ப்பதையே கொண்டாட்டமாக கருதும் நீங்கள், அதற்காக ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவதை உங்களது உதாரண புருஷர்கள் ஏற்றுக்கொள்வார்களா’ என்பது அதிலொன்று. திரையரங்க நெரிசலில் பலி, முதல் நாள் கொண்டாட்டத்தின்போது ரசிகர் காயம் என்று வெளியாகும் செய்திகள் அதற்கான காரணங்களாக இருக்கின்றன.
‘துணிவு’ பட அதிகாலைக் காட்சிக்காக சென்னை ரோகிணி திரையரங்கம் இருக்கும் சாலையில் ஓடிக் கொண்டிருந்த கனரக வாகனம் மீதேறி ஆடிய பரத்குமார் என்ற வாலிபர் கீழே விழுந்து பலியானதும் அதிலொன்றாகச் சேர்ந்திருக்கிறது. ட்ராபிக் காரணமாக அந்த வாகனம் மெதுவாகச் சென்றது என்றும், அந்த ரசிகரைப் போல பலரும் இப்படி ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபட்டனர் என்றும் தகவல்கள் கிடைத்தன. பெரும்பாலான ரசிகர்கள் கட்டுக்கடங்காத காளைகளாகவே அன்றிரவு திரிந்தார்கள் என்பதற்காகவே, அந்த ரசிகரின் மரணத்தைச் சுலபமாகக் கடந்துபோய்விட முடியாது. அதேபோல அஜித், விஜய் ரசிகர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டதாகவும் இப்பிரச்சனையைக் கருதிவிடக் கூடாது.
தொண்ணூறுகளில் ராம்கி, அருண் பாண்டியன் நடித்த ‘இணைந்த கைகள்’ படம் கோவையிலுள்ள திரையரங்கமொன்றில் திரையிட்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியானார்கள். அந்த திரையரங்கம் மூடப்பட்டது.
அதே படம் மும்பையிலுள்ள ட்ரைவின் திரையரங்கில் வெளியானபோது, கூட்ட மிகுதியால் கலவரம் ஏற்பட்டது; அத்திரையரங்கமும் மூடப்பட்டது. அந்த படம் வெளியான காலகட்டத்தில் ராம்கி, அருண் பாண்டியன் இரண்டு பேருமே நட்சத்திர நடிகர்கள் இல்லை என்பது இன்றைய தலைமுறைக்கு ஆச்சர்யமான விஷயமாக இருக்கலாம்.
‘இணைந்த கைகள்’ திரைப்படத்தைப் பொறுத்தவரை படக்குழுவினரின் திறமை மீது, அப்படம் மீதும் இருந்த எதிர்பார்ப்பே அவ்விபத்துகளுக்குக் காரணமாகிப் போனது.
பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போது அதைவிடப் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களின் மனதில் குடிகொண்டிருக்கிறது. அதுவே, இது போன்ற விரும்பத்தகாத அசம்பாவிதங்களை எதிர்கொள்ள நேர்கிறது.
யார் பொறுப்பு?
ரசிகர் மன்றத்திற்கான காட்சிகள் என்றாலே, இன்றும் திரையரங்க உரிமையாளர்கள் அலறுகின்றனர்; ஆனாலும், அக்காட்சியைத் திரையிட அவர்கள் ஒருபோதும் மறுப்பதே இல்லை. காரணம், காலம்காலமாக இந்த அதிகாலை, நள்ளிரவுக் காட்சிகளுக்குக் கிடைக்கும் வசூல். தங்களது சந்தை மதிப்பைக் கூட்ட உதவுவது இவையே என்று நட்சத்திரங்களும் காலம்காலமாக கருதி வருகின்றனர்.
துணிவு, வாரிசு படங்கள் பற்றிய முதல் அறிவிப்பு வெளியானதில் தொடங்கி இந்தக் கணம் வரை விஜய், அஜித் ரசிகர்களிடையே ’யார் பாக்ஸ் ஆபிஸ் கிங்’ என்ற மோதல் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ரசிகர்களுக்கு இடையேயான போட்டி, ‘உன்னை விட என் அபிமானம் உசத்தி’ என்று மார்தட்டிக் கொள்ளக் காரணமாகிறது. அதனைத் தடுத்து நிறுத்துவதே இது போன்ற அசம்பாவிதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். குறைந்தபட்சமாக படவெளியீட்டின்போது அதிகாலை, நள்ளிரவுக் காட்சிகள் வெளியாவதைத் தடுக்கலாம். நீண்டகால நோக்கில் ரசிகர்களை நல்வழிப்படுத்த பல முயற்சிகளை ரசிகர் மன்றங்கள் மூலமாக மேற்கொள்ளலாம்.
ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்கள் அகாலமாக மரணமடைந்தாலோ, ஏதேனும் அபாயத்தில் இருந்தாலோ அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் சொல்வதையும் தேவையான உதவிகள் செய்வதையும் சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கள் வழக்கமாக வைத்துள்ளனர். நிச்சயம் அது அந்த ரசிகனுக்குச் செலுத்தும் நன்றி அல்ல; ஒரு மரியாதை மட்டுமே.
அதே ரசிகன் தனது படம் பார்ப்பதற்காக அல்லது இன்னபிற வழிகளில் தன்னை ஆராதிப்பதற்காக அபாயகரமான செய்கைகளில் இறங்கினால், அவர்களை முறைப்படுத்தி வழிகாட்டும் பொறுப்பும் அந்தந்த நட்சத்திரங்களுக்கே இருக்கிறது. இப்போதே அதனைத் தொடங்கினால், அடுத்த தலைமுறையாவது ரசிப்பதற்கும் ஆராதிப்பதற்கும் வெறி கொள்வதற்குமான வேறுபாட்டை தெரிந்துகொள்ளும்!
இலங்கை பவுலர்கள் திணறல் : சாதனை சதம் கண்ட கோலி, சுப்மன் கில்
’நாட்டு நாட்டு’க்கு இன்ஸ்பிரேஷன்? : நடன இயக்குநர் கொடுத்த ஆச்சரிய பதில்
