வைஃபை ஆன் செய்ததும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பு கூட்டம் டெல்லியில் நடைபெறுவது பற்றிய சில செய்திகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த வருடம் குடியரசுத் தலைவர் தேர்தலை ஒட்டி நடந்தது. அதன் பிறகு வரும் ஜூலை 18ஆம் தேதி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டு இருக்கிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா அல்லது தனக்கு பதிலாக தம்பி துரையை அனுப்பி வைக்கலாமா என்று ஆலோசனையும் எடப்பாடி தரப்பில் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
இதற்கிடையே ஜூலை 13ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேசிய பாஜக தலைவர் நட்டாவை டெல்லியில் சந்தித்தார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் அரசியல் உரையாடல் கூட்டத்திற்கு கலந்து கொள்ள தன்னை தேர்வு செய்வதற்காக அண்ணாமலை நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது இன்னொரு முக்கியமான விஷயமும் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது ஜூலை 28ஆம் தேதி தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்க இருக்கும் நடைப்பயணம் பற்றி விசாரித்து இருக்கிறார் நட்டா. ஏற்பாடுகள் எவ்வாறு நடந்து வருகின்றன என்று அண்ணாமலை, அவரிடம் விளக்கி இருக்கிறார்.
அப்போது ஜே.பி.நட்டா, ‘இந்தப் பாதயாத்திரை துவக்க நிகழ்வில் தமிழ்நாட்டில் இருக்கும் நமது கூட்டணி கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய போது திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அந்த துவக்க நிகழ்வில் கலந்து கொண்டார்.
அதேபோல இப்போது தமிழ்நாட்டில் தொடங்க இருக்கும் நடைப்பயண துவக்க விழாவில் அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று அமித் ஷா விரும்புகிறார்’ என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி உருவாக்க வேண்டும் என்று தலைமையிடம் தொடர்ந்து சொல்லி வந்தாலும், தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலிமைப்படுத்த முயற்சிகள் எடுத்துவரும் பாஜக தேசிய தலைமை தமிழ்நாட்டில் அதிமுக, பாமக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை இழக்க விரும்பவில்லை.

அதனால்தான் எடப்பாடியிடம் ராமேஸ்வரம் நடைப் பயணத் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற டெல்லியின் விருப்பம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அண்ணாமலையின் நடைப் பயணமாக இதைப் பார்க்க வேண்டாம்… அமித் ஷா தொடங்கி வைக்க இருக்கிறார் என்பதால் அமித் ஷாவின் பயணமாகவே இதைப் பாருங்கள் என்றும் எடப்பாடியிடம் டெல்லி சொல்லியிருக்கிறது.
ஜூலை 18 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்துக்கு எடப்பாடி செல்லும்போதோ அல்லது அவரது பிரதிநிதி செல்லும்போதோ இதுகுறித்து மேலும் விளக்கப்படும் என்று தெரிகிறது. எனவே எடப்பாடி டெல்லி செல்வாரா என்ற கேள்வியோடு, எடப்பாடி ராமேஸ்வரம் செல்வாரா என்ற கேள்வியும் சேர்ந்து எழுந்துள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
