“சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது தேவையான அளவு நீர் இருப்பதால், இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது” என்று சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார். will chennai face water crisis 2025
சென்னை நகர மக்களின் குடிநீா் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை, மற்றும் வீராணம் ஏரிகள் உள்ளன. இந்த ஆறு ஏரிகளிலும் மொத்தம் 13,222 மில்லியன் கனஅடி நீா் சேமித்து வைக்கலாம். கடந்த ஆண்டு அவ்வப்போது மிதமானது முதல் பலத்த மழை பெய்தாலும் தண்ணீா் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் அசோசெம் சார்பில் எதிர்காலத் தேவைக்கு ஏற்ற வகையில் நீர் மேலாண்மையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பான மண்டல அளவிலான நீர் மேலாண்மை கருத்தரங்கம் சென்னையில் நேற்று (பிப்ரவரி 20) நடைபெற்றது. இதில் சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் பங்கேற்று கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசியபோது,
“சென்னையில் நாளொன்றுக்கு 1100 மில்லின் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதில் 350 மில்லியன் லிட்டர் நீர், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக கிடைக்கிறது. மீதம் உள்ள 750 மில்லியன் லிட்டர் நீர் ஏரிகளில் இருந்து எடுக்கப்படுகிறது. 2027-ல், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலமே நாளொன்றுக்கு 760 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும். சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இயல்பையொட்டி பெய்துள்ளது. அதனால் தற்போது அனைத்து ஏரிகளிலும் தேவையான அளவு நீர் இருப்பு உள்ளது. எனவே, இந்த ஆண்டு சென்னை மாநகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
சென்னை மாநகரில் வெளியேறும் கழிவுநீரில் 14 சதவீதம் சுத்திகரிக்கப்பட்டு, குடிக்க உகந்த நீராக மாற்றப்படுகிறது. நிலத்தடி நீர் மற்றும் ஏரி நீரை பாதுகாக்கும் விதமாக, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர், மணலி, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் ஆகிய தொழிற்பேட்டைகளில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை கட்டுமானத்துக்கு பயன்படுத்த, கிரெடாய் மூலமாக கட்டுமான நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறோம்.
இதன் மூலம் வெளி மாவட்டங்களுக்கு சென்று, நிலத்தடி நீரை உறிஞ்சுவது தடுக்கப்படும். நிலப்பரப்பு நீரை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஆகும் செலவு, 1000 லிட்டருக்கு ரூ.8-ம், கழிவுநீரை சுத்திகரித்து பெற ரூ.46-ம் செலவாகிறது. இதை தொழிற்சாலைக்கு ரூ.65-க்கு விற்கிறோம். சமதள பரப்பில் சென்னை மாநகரம் அமைந்திருப்பதால், நீரையோ, கழிவுநீரையோ புவியீர்ப்பு விசையின்படி அனுப்ப முடிவதில்லை. மோட்டார்கள் மூலமாக தான் உந்தப்படுகிறது. இதற்காக சென்னை குடிநீர் வாரியம் மாதம் ரூ.250 கோடியை மின் கட்டணமாக செலுத்துகிறது.
தற்போது நெசப்பாக்கம் பகுதியில் கழிவுநீரை சுத்திகரித்து, போரூர் ஏரியில் விட நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம் போரூரை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரின் தரம் உயரும். இவ்வாறு சுத்திகரிக்கப்படும் நீரின் தரம், 100 சதவீதம் பாதுகாப்பானது. சிங்கப்பூரில் அதை மக்கள் குடித்து வருகின்றனர். இந்த நீரை குடிக்க பயன்படுத்தும் அளவுக்கு, சென்னை மக்களிடம் மனமாற்றம் ஏற்படவில்லை” என்று அவர் பேசினார்.