என்.டி.ஏ கூட்டணியில் அமமுகவுக்கு 6 தொகுதிகளா?

Published On:

| By Kavi

என்டிஏ கூட்டணியில் அமமுகவுக்கு ஆறு தொகுதிகள் கொடுக்கப்படுவதாக வெளியான தகவல் வதந்தி என்று அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்  கூறியுள்ளார். 

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல் மற்றும் அர்ஜுன் மேக்வால் ஆகியோருடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். 

ADVERTISEMENT

அப்போது டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர் செல்வத்தை என்டிஏ கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

குறிப்பாக தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடந்ததாகவும் அதில் அமமுகவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. 

ADVERTISEMENT

இந்நிலையில் ஆண்டிப்பட்டியில் இன்று (டிசம்பர் 24) டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவரிடம், பூமாலை போன்ற அதிமுக குரங்கு கையில் சிக்கி இருக்கிறது. அந்த பூ மாலையில்  ஓபிஎஸ்  மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரும் அடக்கம் என வைத்திலிங்கம் கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது

ADVERTISEMENT

இதற்கு அவர், ‘வைத்திலிங்கம் அம்மாவின் தீவிர தொண்டர். எனக்கு ஆதரவாக இருந்த காலத்திலும் சரி, எதிராக இருந்த காலத்திலும் சரி, தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. அரசியல் காரணங்களுக்காக பிரிந்து இருந்தோம். இன்று அதே அரசியல் எங்களை ஒன்றிணைத்து இருக்கிறது. 

இது இருக்கட்டும்… ஊடகங்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நான் எங்கு சென்றாலும் ஊடகங்களை சந்திக்காமல் இருக்க மாட்டேன். என்னிடம் கோபப்படும் வகையில் கேள்வி கேட்டாலும் மற்றவர்கள் போல் இல்லாமல் அமைதியாக தான் பதில் சொல்வேன். 

அப்படி இருக்கும் போது நீங்கள் சில செய்திகளை வெளியிடும்போது உண்மையாகவே வருத்தமாக இருக்கிறது. 

கடந்த 21 ஆம் தேதி நான் கோவில்பட்டி போனபோதே செய்தியாளர்கள் உங்களுக்கு ஆறு தொகுதிகள் கொடுத்து விட்டார்களா என கேள்வி எழுப்பினார்கள். 

அதற்கு இல்லை என்று பதில் சொன்னேன். அது வதந்தி என்றேன். மீண்டும் தகவல் என்ற பெயரில் அந்த வதந்தியை பரப்புகிறார்கள். 

எங்கள் தொண்டர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக எங்கள் கட்சி இருக்கிறது. 

ஊடகங்கள் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளாமல் செய்திகளை வெளியிடுவது எப்படி நியாயமாக இருக்கும்? 

எங்கள் வீட்டுப் பிள்ளையின் கல்யாணத்தை நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஊடகங்கள் அல்ல. 

நடுநிலை ஊடகங்கள் கூட இந்த வதந்திகளுக்கு பலியாகி இருக்கின்றன.

அதேசமயம், அமமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று எங்களை அணுகி முக்கிய கட்சிகள் வலியுறுத்துவது உண்மை’ என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share