அதிமுக என்ன செய்ய வேண்டுமென அமித்ஷா முடிவு செய்வாரா? ஆ.ராசா கேள்வி!

Published On:

| By Kavi

அதிமுகவில் என்ன செய்ய வேண்டும்… செய்யக் கூடாது என்று அமித்ஷா முடிவெடுப்பாரா என்று கேள்வி எழுப்பி எடப்பாடி பழனிசாமியை ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது. அடுத்த கட்டமாக ‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம்’ என்ற முழக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா இன்று (செப்டம்பர் 11) செய்தியாளார்களைச் சந்தித்து பேசினர்.

அப்போது ஆ.ராசா கூறுகையில், தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கவும்; ஒன்றிய அரசால் நடத்தப்படுகின்ற கூட்டாட்சி தத்துவத்தின் படுகொலைக்கு எதிராகவும்; நீட் தேர்வானாலும், தமிழர்களுடைய பண்பாடு பிரச்சனைகளை சிதைக்கின்ற கீழடி பிரச்சனையாக இருந்தாலும், மாநிலத்திற்கு வரவேண்டிய நிதிபங்கீடாக இருந்தாலும், புதிய கல்விக் கொள்கையாக இருந்தாலும் எல்லா தளங்களிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கின்ற, கலாச்சாரத்தை பறிக்கின்ற, மான உணர்வுகளை சிதைக்கின்ற ஒன்றிய அரசுக்கு எதிராகவும் இதுவரை இந்தியாவில் எந்த அரசியல் கட்சி தலைவரும் எடுக்காத ஒரு முயற்சியை தமிழ்நாடு முதலமைச்சர் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில், தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று மண், மொழி, மானம் காப்பதற்காக ஓரணியில் வரவேண்டும் என முயற்சியை எடுத்தார்.

ADVERTISEMENT

கடந்த ஜூலை 1 ஆம் தேதி ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு தொடங்கியது, திமுகவின் 7 லட்சம் தொண்டர்கள் அந்த பணியில் ஈடுபட்டனர். இந்த 70 நாட்களில் தமிழ்நாட்டில் இருக்கின்ற 68,000 வாக்குச்சாவடிகளிலும் சென்று ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தோடு இந்த முன்னெடுப்பின் முதற்கட்டத்தை திமுக வெற்றிகரமாக முடித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளன.

ADVERTISEMENT

இரண்டாவது கட்டமாக வருகின்ற செப்டமபர் 15 ஆம் தேதி மண், மொழி, மானம் காக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இக்குடும்பங்கள் உறுதிமொழியை முன்மொழிய உள்ளன.

அந்த உறுதிமொழிகளை கட்சி தலைமைக்கு அனுப்பி அவற்றை தொகுத்து, அடுத்த கட்டமாக நமது தலைவர் 17-ஆம் தேதி கரூரில் நடைபெறவிருக்கின்ற முப்பெரும் விழாவில் அந்த உறுதிமொழியை லட்சக்கணக்கான மக்களின் முன்பாக நிறைவேற்றுவார்.

அடுத்த கட்டமாக செப். 20, 21 ஆகிய தேதிகளில் திமுக சார்பில் மாவட்ட அளவில் ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழியை வழிமொழிந்து தமிழ்நாடு முழுக்க தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.

அந்தக் கூட்டங்களில் அரசியல் கட்சிகளை தாண்டி பொதுமக்கள் , வணிகர்கள், வர்த்தகர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்பர்.

‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம்’ என்ற பிரகடனத்தை தமிழ்நாடு முழக்க கொண்டு செல்வதற்காக ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் லட்சக்கணக்கான மக்கள் பங்கு பெறும் அளவில் பொதுக்கூட்டம் நடைபெறும்.

இப்படிப்பட்ட ஒரு நிகழ்வினை இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்தது இல்லை என்ற அளவிற்கு மூன்று கட்டங்களாக, 70 நாட்களுக்கு முன்னால் தொடங்கிய இந்த இயக்கம் பல்வேறு பரிமாணங்களைக் கடந்து, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி முயற்சியை இதுவரை இந்திய அரசியலில் எந்த ஒரு அரசியல் கட்சியும் எடுக்கவில்லை என்பது அதன் சிறப்பு” என்று தெரிவித்தார்.

அதன்பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ‘எப்போது பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவில்லை. பல நிகழ்ச்சிகள் மூலம் அதை தொடங்கியிருக்கிறோம்” என்றார்.

அப்போது அவரிடம் திமுக ஐசியுவில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறாரே என்ற கேள்விக்கு,

நாங்கள் ஐசியுவில் இருக்கிறோமோ… இல்லையோ அவருக்கு ஹார்ட் பீட் சரியாக இருக்கிறதா என்று பார்க்க சொல்லுங்கள். செங்கோட்டையன் போனால் ஒரு ஹார்ட்பீட் அடிக்கிறது. ஓபிஎஸ் ஸ்டேட்மெண்ட் கொடுத்தால் அடிக்கிறது. செங்கோட்டையன் அமித்ஷாவை பார்த்தால் டிக் டிக் என்கிறது. எனக்கு எடப்பாடியை பார்த்தால் பயமாக இருக்கிறது. அவரது உடல்நிலையை பார்த்துக்கொள்ள சொல்லுங்கள்.

நாங்கள் தலைகுனிய மாட்டோம் என்று சொல்வதற்கு என்ன காரணம் என்றால் அவர்கள் தலை குனிந்து நிற்கிறார்கள். அதிமுகவில் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று அமித் ஷா முடிவு செய்ய வேண்டுமா?

ஒரு அரசியல் கட்சித் தலைவர் இங்கு ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டு டெல்லி போகிறார். அவர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து தவிர்க்க முடியாத சக்தி, தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர். அமைச்சராக இருந்தவர். அந்த பகுதியில் பரிச்சயமானவர் என்று நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள்.

அவர் டெல்லி போய் உள்துறை அமைச்சரை பார்க்கிறார். இதுதொடர்பாக இவரும் எதுவும் சொல்லவில்லை… அவரும் எதுவும் சொல்லவில்லை. இந்த கள்ளத்தனத்துக்கு என்ன பெயர்?

இதைத்தான் சொல்கிறோம். தன்னுடைய இயலாமையால் ‘ஓரணியில் தமிழ்நாடு’ குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். அதிமுக பாஜகவிடம் மண்டியிட்டு விட்டது. தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடகு வைக்கத் துடிக்கின்றார்கள்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share