தெலுங்கு திரையுலகின் ஸ்டைலிஷ் நடிகர் என தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அல்லு அர்ஜூன். இவரின் ஒவ்வொரு படமும் தெலுங்கில் வணிகரீதியாகவும், வசூல் அடிப்படையிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி திரைக்கு வருகிறது ’புஷ்பா : தி ரைஸ்’ திரைப்படம். அல்லு அர்ஜூனுக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களோடு, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் தெலுங்கு மட்டுமின்றி, நேரடியாக தமிழிலும் வெளியாகிறது. தமிழில் படத்துக்கான வசனங்களை மதன்கார்க்கி எழுதியுள்ளார். இசை :ஸ்ரீதேவி பிரசாத். படத்துக்கான சில முக்கிய காட்சிகள் தமிழகத்திலும் எடுக்கப்பட்டுள்ளது. புஷ்பா படம் தமிழகத்தில் சுமார் 400 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக, பிறமொழி நடிகர்கள் நடித்த பிறமொழி படங்களுக்கு தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்காது. அதனால், அல்லு அர்ஜூன் படத்துக்கு அதிக திரைகள் கிடைத்திருப்பது தமிழ் ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பை காட்டுகிறது. அதோடு, படத்திலிருந்து வெளியான ‘சாமி’ பாடலானது தெலுங்கை விடவும் தமிழில் மிகப்பெரிய ஹிட்டாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பிறந்து 20 வயது வரை இங்கேயே வளர்ந்த அல்லு அர்ஜூன் தெலுங்கைப் போலவே, தமிழிலும் மாஸ் ஹீரோவாகிவிட வேண்டுமென்பது நீண்டநாள் கனவு. அதனால், அவரின் படங்கள் தெலுங்கில் வெளியாவதோடு தமிழிலும் வெளியாகும்.
ஆனால் வசூல் ரீதியாக வெற்றி பெறுவது இல்லை. தற்பொழுது, நேரடியாக திரையரங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படம் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. நீண்ட நாளாக தமிழில் மிகப்பெரிய ஓபனிங்கை எதிர்பார்த்துக் காத்திருந்த அல்லுஅர்ஜூனின் ஆசை இதன் மூலமாக நிறைவேறியுள்ளது. அது வணிகரீதியான வெற்றியை தருமா என்பது டிசம்பர் 17ல் தெரிந்துவிடும்.
**இராமானுஜம்**