அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்குமா என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். Will AIADMK attend the all-party meeting
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் அயோத்தியாபட்டினத்தில் அதிமுக சார்பில் இன்று (பிப்ரவரி 28) ரத்த தானம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் தொகுதி மறுவரையை தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக கலந்துகொள்ளுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் இருவர் பங்கேற்பார்கள். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அதிமுகவின் நிலைப்பாட்டை கூட்டத்தில் தெரிவிப்போம். அங்கு சொல்வதை இங்கு சொல்ல முடியாது” என்றார்.
மேலும் அவர், “ஆளுங்கட்சியை தவிர மற்ற கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சிகள்தான். ஆனால், நாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி. சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து அதிமுகவுக்குத்தான் உள்ளது. வேறு எந்த கட்சியும் கிடையாது. 2026-ல் அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும்” என்று கூறினார்.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அடுத்த 63 வாரங்களுக்கு தவெக தான் எதிர்க்கட்சி, விஜய்தான் எதிர்க்கட்சி தலைவர்” என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பான கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பதிலளித்துள்ளார். Will AIADMK attend the all-party meeting