நடிகர் ரவி மோகன் நீதிமன்ற உத்தரவு படி சொத்து உத்தரவாதத்தை தாக்கல் செய்ய தவறியதால் அவரது சொத்துக்களை முடக்குவது தொடர்பாக மனுதாக்கல் செய்ய பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 20) உத்தரவிட்டது.
நடிகர் ரவி மோகன் தங்களது படத்தில் நடிக்க முன் பணமாக பெற்ற 6 கோடியை திரும்பிதர உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி பாபி டச் கோல்டு யுனிவர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
அதேசமயம் உரிய வகையில் கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பு பணிகளை குறித்த காலத்துக்குள் தொடங்கவில்லை. இதனால் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.9 கோடி இழப்பீடு கோரி பாபி டச் கோல்டு யுனிவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக ரவி மோகன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்நிலையில் நீதிமன்றம் நடிகர் ரவி மோகனின் வழக்கை தள்ளுபடி செய்ததோடு, படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய 5.90 கோடிக்கான சொத்து உத்தரவாதத்தை ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ரவி மோகன் இன்றுவரை சொத்து உத்தரவாதத்தை தாக்கல் செய்யாததால் அவரது சொத்துக்களை முடக்க கோரி படத்தயாரிப்பு நிறுவனம் மனுதாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரவி மோகனின் சொத்துகள் முடக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
