2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 எம்எல்ஏக்கள் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் இன்று எம்எல்ஏ இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளனர்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நியமிக்கப்பட்ட கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும், முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ-க்கள், தங்களது அணியைச் சேர்ந்த விஜயபாஸ்கரை கொறடாவாக அங்கீகரிக்கக் கோரி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், எஸ்பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
விஜய் அரசுக்கு ஆதரவளித்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் அமைச்சரவையில் எஸ்பி.வேலுமணி தரப்புக்கு அமைச்சர் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அதிமுகவின் இந்த அதிருப்தித் தரப்புக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
வரிசையாக ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ-க்கள்
இந்தச் சூழ்நிலையில், எஸ்பி.வேலுமணி அணியைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமாரவேல், சத்யாபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் நேற்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். அதோடு மட்டுமன்றி, அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திலும் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தொடரும் சரிவு – இன்று இசக்கி சுப்பையா ராஜினாமா:
நேற்று 3 எம்.எல்.ஏ-க்கள் விலகிய பரபரப்பு அடங்குவதற்குள், இன்று அதே எஸ்பி.வேலுமணி அணியைச் சேர்ந்த
- அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா
- ஓசூர் தொகுதி எம்எல்ஏ பாலகிருஷ்ணாரெட்டி
- பழனி தொகுதி எம்எல்ஏ ரவி மனோகரன்
- திருத்தணிதொகுதி எம்எல்ஏ கோ.ஹரி ஆகியோர் ராஜினாமா செய்ய உள்ளனர்.
நேற்று ராஜினாமா செய்த 3 எம்.எல்.ஏ-க்களைப் போலவே, இந்த 4 பேரும் இன்று தவெக-வில் இணைய உள்ளனர். இந்த அடுத்தடுத்த ராஜினமாக்கள் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.










