அமெரிக்காவில் விஸ்டம் என்று செல்ல பெயர் கொண்ட 74 வயது கடல்பறவை ஒன்று முட்டையிட்டுள்ளது.
அமெரிக்காவின் மிட்வே தீவில், மிட்வே அடால் உயிரின பாதுகாப்பு மையத்தில் Laysan albatross ரகத்தை சேர்ந்த விஸ்டம் என்ற பெயர் கொண்ட பறவை வசித்து வருகிறது. இதற்கு தற்போது 74 வயதாகிறது. இதன் ஜோடி பறவையான அக்கியேகாமியும் விஸ்டமும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இங்கு வசித்து வந்தன.
4 ஆண்டுகளுக்கு முன்பு அக்கியோகாமி வெளியேறி விட்டது. இதனால், கடந்த 4 ஆண்டுகளாக விஸ்டம் முட்டையிடவில்லை. இதற்கிடையே, விஸ்டமுக்கு மற்றொரு ஜோடி இங்கேயே கிடைத்தது.
இந்த நிலையில், 74 வயதில் விஸ்டம் மீண்டும் முட்டையிட்டுள்ளது. விஸ்டம் முட்டையிடுவது 60வது முறையாகும். இந்த பறவைகள் இனப்பெருக்கத்துக்காக ஒரு முட்டைதான் இடும். அதுவும், ஆண்டுக்கு ஒன்றுதான்.
1956 ஆம் ஆண்டு முதன்முறையாக விஸ்டன் குஞ்சு பொறித்தது. தன் வாழ்நாளில் 30 குஞ்சுக்களை அது வளர்த்துள்ளது. இந்த ரக பறவைகளின் சராசரி வயது 68 ஆகும்.
இது குறித்து காப்பகத்தின் இயக்குநர், ஜோனதான் பிளிஸ்னர் கூறுகையில், “ஆண்டுதோறும் ஏராளமான கடற்பறவைகள் இங்கு வந்து முட்டையிடுகின்றன. இந்த வயதில் விஸ்டன் இட்ட முட்டையும் குஞ்சு பொரிக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
ஆண், பெண் இரு பறவைகளுமே குஞ்சுவை பராமரிக்கின்றன. பொதுவாக ஐந்து முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு, குஞ்சுகள் பறக்க தொடங்கும். அதுவரை, பெற்றோரின் பராமரிப்பில் இருக்கும். இந்த கடற்பறவைகள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை கடலின் மேல் பரப்பிலேயே கழிக்கின்றன. மீன் முட்டைகள் இவற்றுக்கு பிடித்த உணவு” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
செந்தில் பாலாஜியின் மிரட்டலுக்கு பாமக அஞ்சாது: வழக்கறிஞர் பாலுபிளாஸ்டிக் ஸ்மைல்: ஐஸ்வர்யா ராயுடன் காதல் முறிவு ஏன்? மனம் திறந்த விவேக் ஒபராய்