இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 டெஸ்ட் போட்டிகளை விளையாடி முடித்துள்ளது. இதில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இதனிடையே 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் இரண்டு அணிகளும் நேரடியாக மோத உள்ளன.
இதில் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இன்று (ஜூலை 29) தேதி நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டி பார்படாஸ் நகரில் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.
இதனிடையே, இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏனெனில் முதல் போட்டியின் போது ஆடும் லெவனில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், அவருக்கு ஆதரவாகவும், ஐசிசிஐ- க்கு எதிராகவும் சமூகவலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதே நேரம் பேட்டிங்கை பொறுத்தவரை, இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
பந்து வீச்சை பொறுத்த வரை முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
இதிலும் குறிப்பாக கடந்த போட்டியில், குல்தீப் யாதவ்3 ஓவர்களில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அதில் 2 ஓவர்கள் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறத்தில், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். எனவே இந்திய அணி சூழலில் நல்ல பார்மில் இருக்கிறது.
ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்த வரை கடந்த மாதம் உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றில் விளையாடிய போது ஸ்காட்லாந்து அணியுடன் படு தோல்வி அடைந்து உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பறிகொடுத்தது.
அதேபோல் இந்திய அணி உடனான டெஸ்ட் தொடரிலும் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. அதோடு ஒருநாள் போட்டியிலும் சொதப்பி வருவதால் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.
இதானால் தங்கள் அணியின் பலத்தை காட்டுவதற்கு கடுமையாக வெஸ்ட் இண்டீஸ் அணி போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தப் போட்டி டி.டி தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமாவிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஜெய்ஷாவின் நிறுவன மதிப்பு உயர்ந்தது எப்படி?: அமித் ஷாவுக்கு உதயநிதி கேள்வி!
”மோடியிடம் கேட்க அமித்ஷாவிற்கு தைரியம் இருக்கிறதா?”: ஸ்டாலின் பேச்சு!
