ADVERTISEMENT

விஜய் ரோடு ஷோ அனுமதி மறுப்பு- ‘சீரியஸே தெரியலையா? புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவை எகிறிய புதுவை அதிகாரிகள்

Published On:

| By Mathi

Puducherry Vijay Road Show

புதுச்சேரியில் டிசம்பர் 5-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்துவதற்கு புதுவை அதிகாரிகள் திட்டவட்டமாக அனுமதி மறுத்ததால் அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தின் கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி விஜய் ரோடு ஷோ நடத்தியதில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ரோடு ஷோவுக்கு பதில் உள்ளரங்கில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை விஜய் நடத்தி வருகிறார். அண்மையில் காஞ்சிபுரம் அருகே தனியார் கல்லூரியில் அப்பகுதி மக்களை விஜய் சந்தித்து பேசியிருந்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் டிசம்பர் 5-ந் தேதி விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.

பாஜக மீது ரங்கசாமி அதிருப்தி

ADVERTISEMENT

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் பாஜகவால் தொடர்ந்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதால் முதல்வர் ரங்கசாமி கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

விஜய்க்கு ஆதரவாக ரங்கசாமி

ADVERTISEMENT

இன்னொரு பக்கம், விஜய் அரசியல் கட்சி தொடங்கியதன் பின்னணியில் ரங்கசாமி இருக்கிறார் என கூறப்பட்டு வந்தது. விஜய்யை அவரது பனையூர் இல்லத்தில் ரங்கசாமி 2022-ல் சந்தித்து பேசியது இதனை உறுதிப்படுத்துவதாக இருந்தது.

என்.ஆர் காங்கிரஸ்- பாஜக மோதல்

தற்போதைக்கு பாஜகவுடன் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்வி இருந்து வருகிறது. அந்த அளவுக்கு பாஜகவிடம் இருந்து குடைச்சல்களை எதிர்கொண்டு வருகிறார் ரங்கசாமி.

பாஜகவுக்கு பிடி கொடுக்காத ரங்கசாமி

அண்மையில் ரங்கசாமியை பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் நிர்மல்குமார் சுரானா, மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் சந்தித்து கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச முயன்றனர். ஆனால் ரங்கசாமியோ, ஆளுநர், அதிகாரிகள், பாஜக எம்.எல்.ஏக்களால் ஒவ்வொரு நாளும் தாம் சந்திக்கும் பிரச்சனைகளை எல்லாம் பட்டியல் போட்டு குமுறியதுடன், கூட்டணி பற்றி ஜனவரி மாதம் பேசலாம்.. இப்ப ஒன்றும் அவசரம் இல்லை என திருப்பி அனுப்பிவிட்டார்.

தவெக- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி?

பாஜகவிடம் ரங்கசாமி இப்படி கடுமையாக நடந்து கொண்டதே, ஆளுநர் முதல் அதிகாரிகள் வரை கொடுக்கும் குடைச்சல்கள் மட்டுமல்ல்.. 2026 தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைக்கத்தான் எனவும் கூறப்படுகிறது.

என்.ஆர். காங்கிரஸில் எதிர்ப்பு

ஆனால் ரங்கசாமியின் விஜய் கட்சியுடனான கூட்டணி முயற்சிக்கு என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கடும் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனராம். ”புதுவை யூனியன் பிரதேசமாக இருப்பதால், தேசியக் கட்சிகளான பாஜக அல்லது காங்கிரஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கூட்டணி அமைப்பதுதான் சரியாக இருக்கும்” என ரங்கசாமியின் விஜய் கட்சியுடனான கூட்டணிக்கு முட்டுக்கட்டை போட்டும் வருகின்றனர்.

தவெக எதிர்பார்ப்பு

இந்த பின்னணியில், புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல்வராக ரங்கசாமி இருப்பதால் எளிதாக அனுமதி கிடைக்கும் என தவெகவினர் எதிர்பார்த்தனர்.

புதுச்சேரியில் அனுமதி மறுப்பு

ஆனால் எதிர்பாராத திருப்பமாக, புதுச்சேரியில் விஜய் டிசம்பர் 5-ந் தேதி ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. அத்துடன் விஜய், பொதுக்கூட்டம் நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுத்தது ஏன்?

விஜயக்கு ஆதரவாக முதல்வர் ரங்கசாமி இருந்தும் ரோடு ஷோவுக்கு அனுமதி கிடைக்காமல் போனது ஏன் என்பது தொடர்பாக புதுவை தவெக நிர்வாகிகளிடம் நாம் பேசிய போது, ”தவெக பொதுச்செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா புதுச்சேரியிலேயே தங்கி எப்படியாவது அனுமதி வாங்க வேண்டும் என முயற்சித்தனர். ஆனால் அதிகாரிகள் அனுமதி தராமல் இருந்தனர். இதனால் நேற்று டிசம்பர் 2-ந் தேதி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி தர வேண்டும் என புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா கேட்டுக் கொண்டனர்.

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவை எகிறிய அதிகாரிகள்

இதனையடுத்து புதுச்சேரி டிஜிபி ஐஜி அஜித்குமார் சில்வா, டிஐஜி சத்தியசுந்தரம் உள்ளிட்டோருடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவும் உடனிருந்தனர்.

அப்போது, “தமிழ்நாட்டில் நல்ல சாலை வசதிகள் இருக்கின்றன.. அங்கேயே நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கே ரோடு ஷோ நடத்துவதற்கான வசதி இல்லை.. உங்களுக்கு எல்லாம் பிரச்சனையின் ‘சீரியஸ் தெரியவே இல்லையா?” என புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவை பார்த்து அதிகாரிகள் கோபமாகவே கேட்டனர். இதனால் விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. தற்போது இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அனுமதி இல்லை ஏன்?

புதுவை சபாநாயகர் செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் தமிழகத்தைப் போல பிரம்மாண்டமான தேசிய நெடுஞ்சாலை எதுவும் இல்லை. இங்கே அனைத்து சாலைகளுமே குறுகியவைதான்.. எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும். அதனால் விஜய் ரோடு ஷோவுக்கு அரசு அனுமதி தரவில்லை; பொதுக்கூட்டம் நடத்த மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது என்றார்.

ரங்கசாமி கூட்டணி முயற்சிக்கு ‘செக்’

மேலும் விஜய் தவெகவுடன் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி சேருவதைத் தடுக்கவே அதிகாரிகள் மூலம் பாஜக அனுமதி தர மறுத்திருக்கிறது என கொந்தளிக்கின்றனர் முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள்.

விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம்

இதனால் புதுச்சேரியில் விஜய் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share