தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணமோசடி செய்தல் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.
அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, விசாரணையில் செல்வாக்கு செலுத்தி, சட்டம் மற்றும் நீதி வழங்கப்படுவதைத் தடுக்கிறார். தற்போது அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வரும் குற்ற வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மேலும் சில குற்ற வழக்குகள் மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை எதிர்மறையாகப் பாதிக்கும். இது இறுதியில் மாநிலத்தில் அரசமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அச்சங்கள் உள்ளன.
இந்நிலையில், வி.செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர் என் ரவி உடனடியாக நீக்கியுள்ளார்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
